எப்போதும் புலிகள் பற்றியே பேசும் சிறீதரன் இப்போது கோமாவிலா?

sri sumanthiran 1
sri sumanthiran 1

எதற்கெடுத்தாலும் புலிகளின் நினைவு வரும், எதற்கெடுத்தாலும் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நினைவு வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், தற்போது அரசியல் கோமாவில் இருக்கிறாரா என அவரது ஆதரவாளர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் விடுதலைப் புலிகளையும் அவ் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்.

இந்தக் கருத்துக்கள் கூட்டமைப்பு மீது விமர்சனம் கொண்ட கட்சிகளை மாத்திரமின்றி, கூட்டமைப்புக்குள்ளேயும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மாத்திரமின்றி சுமந்தினை இதுவரை ஆதரித்து வந்தவர்களும் விசனம் கொண்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் எங்கும் சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்கள் அலை அலையாக வெளிப்படுகின்றன. இந்த தேர்தலில் அவர் படுதோல்வியை தழுவுவார் என்றும் கணிப்புக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தவிர்க்க முடியாத கட்டத்தில் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்களும் சுமந்திரனின் கருத்தை நிராகரித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளர். சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்தல்ல என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் இருவேறு அறிக்கைகளில் கூறியுள்ளனர்.

அத்துடன் சுமந்திரனின் பேச்சாளர் பதவியை பறிக்க வேண்டும் என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் போர்க்கொடி தூக்கியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களும் சுமந்திரனுக்கு எதிராகத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அத்துடன் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கருத்தை சுமந்திரன் வெளியிட்டுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சரவணபவன் போன்றவர்களும் கடுமையான அறிக்கைகளின் வழி தெரிவித்துள்ளனர்.

ஆனால், எதற்கெடுத்தாலும் எப்போது பார்த்தாலும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் அவ் இயக்கத்தின் தலைவரைப் பற்றியும் பேசிப் பேசியே அரசியல் செய்பவர் சிறீதரன். விடுதலைப் புலிகள் இயக்கத்தை தனது அரசியல் சொந்த முதலீடு போல பாவித்தும் வருபவர்.

தான் ஒருவரே புலிகள் இயக்கத்தில் பக்தி கொண்டவர்போலவும் அதன் தலலைமை போலவும் பாசாங்கு செய்து வந்த சிறீதரன், இப்போது எல்லோரும் சுமந்திரனை கண்டித்த பின்னரும் மௌனமாக இருப்பது ஏன் என்ற கேள்விதான் அவரது ஆதரவாளர்களையும் பெரும் குடைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.

சுமந்திரனை கட்சியின் தலைமை மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்து கண்டித்த பின்னரும் சிறீதரன் மௌனமாக இருப்பது, அவர் அரசியல் கோமாவில் இருக்கிறாரா என்று அவரது ஆதரவாளர்களே விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் சுமந்திரனின் கருத்துக்களுக்கு சிறீதரன் உடன்படுகிறாரா அல்லது, அவருடன் விமர்சனங்களற்ற அரசியல் கூட்டை கொண்டுள்ளாரா என்றும் கேள்விகள் எழுப்பட்டுள்ளன. இந்த விடயங்கள் தொடர்பில் திரு. சிறீதரன் அவர்களின் கருத்தை அறிய தமிழ்க்குரல் அவரைத் தொடர்புகொள்ள முற்பட்டது.

எனினும் தமிழ்க்குரல் என்ற பெயரை கேட்டதும் திரு. சிறீதரன் அவர்கள் தொடர்பை துண்டித்துக் கொண்டார். நின்றால் புலிகள், இருந்தால் புலிகள், நடந்தால் புலிகள் என்ற சிறீதரனின் இரட்டை அல்லது போலி நிலைப்பாட்டை இவரது கள்ளமௌனம் இப்போது மிக தெளிவாக உணர்த்தியுள்ளது.