ஹீரோவான செல்வம் சீரோவான சிறீதரன்!

hero selvam zero sri
hero selvam zero sri

விடுதலைப் போராட்டத்தையும் அதன் தலைமையையும் கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் கருத்துக்களுக்கு மிக விரைவாகவும் கச்சிதமாகவும் எதிர்வினையாற்றியதன் மூலம் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உலகத் தமிழ் மக்களின் பாராட்டையும் விருப்பையும் பெற்றுள்ளார். அத்துடன் தமிழ் அரசியலின் முன்னணித் தலைவர்கள் பலரும் சுமந்திரனின் கருத்துக்களுக்கு கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஆயுதப் போராட்டத்தில் பொது மக்கள், போராளிகள் ஒட்டு மொத்தமாக உயிரை அர்ப்பணித்து உள்ளதாகவும் ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத் தான் உலகளாவிய ரீதியில் ஈழ இனப் பிரச்சினை வரலாறாகப் பதியப்பட்டுள்ளதாகவும் கூறிய செல்வம் அடைக்கலநாதன், ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களை இலங்கை அரசுடன் பேசும் ஒரு வாய்ப்புக் கிட்டியதாகவும் குறிப்பிட்டார்.

தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்தான் என்று தெரிவித்துள்ள வட மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவரும் தமிழரசுக் கட்சியின் பிரமுகருமான சீ.வி.கே. சிவஞானம், ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ் தேசிய இனத்தின் விடுதலை வேட்கை வெளியுலகுக்கு பகிரப்பட்டு ஆதரவுபெற்ற நிலையோடு தொடர்புபட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்துகொண்டு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுவதை நிச்சயமாகத் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆயுதப் போராட்டம் தமிழ் மக்கள் விரும்பி ஏற்றதல்ல, தவிர்க்க முடியாமல் அது தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது என்று கூறியுள்ள புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலத்திலிருந்து அந்த வரலாற்று ஓட்டத்தில் பயணிப்பவன் என்ற ரீதியில், சுமந்திரனின் கருத்து தவறானது. அவருடைய கருத்தை தமிழர்கள் எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஐந்துவயது முதல் வாழ்ந்து சிங்கள நண்பர்களுடன் உண்டு உறவாடி வளர்ந்து வசித்து வந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தமிழ்தேசிய உணர்வு இருக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என கூறியுள்ள மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், புலிகளின் போராட்டம் இல்லை எனில் எப்படி சுமந்திரன் எம்.பி யாக வந்திருக்க முடியும்? எப்படி ஐநா சபை சர்வதேசம் என சுமந்திரன் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருக்க முடியும்? எப்படி புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி இருக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக பேச்சாளர் பதவி அவரிடத்திலிருந்து வேறு நபர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அத்துடன், ஆயுதப்போரட்டம் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம் என்றும் அதனை மறுப்பவன் ஈழத்தமிழன் என்று சொல்வதற்கு அருகதையற்றவன் என்றும் முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கூறியிருந்தார். தமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களால் எந்தவிதமான நன்மையும் கிட்டவில்லை என்பதால் தான், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்களே தவிர விளையாட்டுக்காகவோ, ஆசைக்காகவோ அவர்கள் ஆயுதம் எந்தவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் சுமந்திரனை கண்டித்து வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் இன்னமும் மௌனம் கலையாத நிலையில் உள்ளார். இது தொடர்பில் கருத்துக்களை கேட்பவர்களை துரோகி என்றும் அரசின் ஆள் என்றும் வழமைபோல கூறி கள்ளமௌனத்தில் காலத்தை கடத்துகிறார்.

விடுதலைப் போராட்டத்தை ஏற்கவில்லை, அதன் தலைவர் பிரபாகரனை ஏற்கவில்லை என்ற சுமந்திரனின் நிலைப்பாடுதான் சிறீதரனின் நிலைப்பாடுமா? என்பதே தற்போதைய கேள்வியாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தீவிர தமிழ் தேசியம் பேசியதுடன் விடுதலைப் புலிகளை கடுமையாக ஆதரிப்பவர் போல பாசாங்கு செய்து வந்தார் சிறீதரன். இலங்கை பாராளுமன்றத்தில் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரையை பிரதியெடுத்துப் பேசிய இவர் இப்போது ஆமைபோல அடங்க என்ன காரணம்? சிறீதரன் மௌனமாக இருப்பதன் சூட்சுமம் என்ன என்பது அவரது ஆதரவாளர்களுக்கே பெரும் குடைச்சலை கொடுத்திருக்கிறது.

சுமந்திரன் எப்படியும் நீக்கப்படமாட்டார், அவரே அடுத்த தலைமை அவரை பகைத்தால் நாளை பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதை கருத்தில் கொண்டே சிறீதரன் மௌனித்து இருக்கிறாரா? தனது அரசியல் இருப்புக்காக மௌனித்திருக்கும் சிறீதரன், இனிமேல் புலிகள் பற்றி பேச எந்த அருகதையுமற்றவர் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எவ்வாறெனினும் சுமந்திரனின் சர்ச்சையான பேச்சுக்களின் வாயிலாக சுமந்திரன் உண்மை முகம் மாத்திரமின்றி சிறீதரனின் உண்மை முகமும் வெளிப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.