மனித குலத்தின் மீள் விசாரணைக்கான ஒரு தவக்காலம் கொரனோ காலம் :பேராசிரியர் கலாநிதி என் .சண்முகலிங்கன்

thumbnail 1
thumbnail 1

மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – இலங்கை அவர்களுடன் கொரனோ காலத்தைக் கருத்திற்கொண்டு மின்னஞ்சல் வாயிலாகக் கண்ட நேர்காணல்

யாழ்ப்பாணத்தில் தென்மயிலையில் கட்டுவன் கிராமத்தில் பிறந்து கல்வியில் உயர்நிலை பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக்கத்தின் துணைவேந்தராய் பதவி வகித்தவர்தான் பேராசிரியர் கலாநிதி நா. சண்முகலிங்கன் அவர்கள்.


யாழ்மண்ணின் புகழ்பூத்த மகாஜனாக் கல்லூரியில் விஞ்ஞானம் படித்துபல்கலைக்கழகம் சென்று கல்வித்துறையில் பட்டம் பெற்று சமூகவியல் துறையினைத் தேர்ந்தெடுத்து புலமைப் பரிசிலைப் பெற்று பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாப் பல்கலைக்கழகத்தில் உயர்பட்ட ஆய்வினை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். நிறைவில் அமெரிக்க பிரின்ஸ்ரன். பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியர் கணநாத் ஒபயசேகர வழி காட்டலில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

சமயத்தின் சமூகவியல், பண்பாட்டு மானிடவியல் , ஊடகக்கல்வி , செயல்முறை வடிவிலான நுண்சமூகப் பொறிமுறையியல் என்பவற்றில் இவரது ஆர்வமும் ஆய்வும் அமைந்திருந்தது.
கவிதை , சிறுகதை , நாடகம் , சிறுவர் நாவல், நாவல், ஆக்க இசைப் பாடல்கள் என்று பல்துறைகளில் முத்திரை பதித்துள்ளார்.அத்துடன் தமிழில் சமூகவியல் , மானிடவியல் , துறைசார்ந்த நூல்களை எழுதிய முன்னோடியாகவும் விளங்குகிறார்.

1981 ஆம் ஆண்டு உதவி விரிவுரையாளராக யாழ்ப்பாணப் பல்லகலைக் கழகத்தில் நியமனம் பெற்று பேராசிரியராய் துறைத்தலவராய் வளர்ச்சியுற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராய் உயர்வு பெற்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மானிடவியல் துறைகளை நிலைபெறச் செய்த பெருமையினையும் பெற்றுக்கொள்ளுகின்றார்.அதுமட்டும் அல்ல அத்துறையின் முதல் பேராசிரியராகவும் அத்துறையின் தலைவராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றிய பெருமையினையும் இவர் பெற்றுக் கொள்ளு கிறார். இதுவரை பதினைந்து நூல்களைத் தந்திருக்கிறார். அதில் இரண்டு நூல்கள் ஆங்கிலத்தில் ஆக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பன்முக ஆளுமையாக விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி நா. சண்முகலிங்கன் அவர்களை சிட்னி உதயசூரியனுக்காக நேர்காணல் செய்தேன். அந்த நேர்காணல் இங்கே விரிகிறது. மனமுவந்து நட்புடன் தன் சிந்தனைகளை வழங்கிய அவரை வாழ்த்தி நன்றி நவின்று மகிழ்கின்றேன்.

பேராசிரியர் கலாநிதி என் .சண்முகலிங்கன்

மேனாள் துணை வேந்தர் – சமூகவியல் சிரேஷ்ட பேராசிரியர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – இலங்கை

நேர்கண்டவர்: மகாதேவஐயர் ஜெயராமசர்மா

1) பல்துறை அறிஞராக தற்போது உலகையே அச்சுறுத்தும் கொடிய அரக்கனான கொரனோவை நீங்கள் எப்படிப்பார்க்கிறீர்கள் ?

மனித வரலாறு , ஆங்காங்கே இது போன்ற பேரனர்த்தங்களை சந்தித்ததுண்டு.ஆனாலும் இன்றைய தொடர்பூடக-உலகமயமாக்க விரிவாக்கத்தில் கொரோனாவும் அதுபற்றிய செய்திகளும் உலகம் முழுமையையும் ஆக்கிரமித்து நிற்கின்றது என்றே சொல்லவேண்டும்.


வவ்வால்,பாம்பு,அழுங்கு போன்ற விலங்குகள் வழி கொரோனா அரக்கன் வரவா அல்லது அழித்தல் நோக்கிலான மனித அரக்கனின் அறிவின் அரசியல் சதியா என்ற வினாக்களுக்கு இன்னமும் தெளிவான விடையில்லை. உலக வல்லரசுகளிலிருந்து சகலரும் கையறுநிலையில்…

’நவீன வாழ்வியல் வேகத்தில் எல்லாம் முடியும்’ என்ற வேகம் கெட, எல்லாமும் எல்லோரும் ஒடுங்கிய ஒர் அனுபவமாக கொரோனா ;இந்த ஒடுக்ககாலம் என்பது கடந்தகாலம் பற்றிய மனித குலத்தின் மீள் விசாரணைக்கான ஒரு தவக்காலம் என்பேன்.

2) கொரனோவின் காரணமாக வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை இன்று பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து வீட்டில் இருப்பதால் பலர் மனமுறு கலுக்கு ஆளாகின்றனர் என அறிய முடிகிறது. இதைப்பற்றிய கருத்தினைத் தந்தால் பலருக்கும் பயனாகும் இருக்கும் அல்லவா …

வீட்டிலே முடங்கியிருத்தல் என்ற பதம் கூட ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல கட்டமைக்கப்பட்ட சங்கதிதான்.வீட்டிலே இருக்க நேரமில்லையே என அந்தரித்த மனிதர், இன்று வீட்டில் இருக்க கிடைத்த சூழலின் வாய்ப்பான பக்கங்களை மனங்கொள்ளவேண்டும்.அவசர யந்திர வாழ்விடை நாம் தொலைத்த குடும்ப உறவின் அழகினை ,சொந்த வீட்டின் அழகினை ஆராதிக்கக்கிடைத்தது வரப்பிரசாதமாக இந்த நாட்களைக் கொண்டாடவேண்டும்.


இது கூட ஒருவிதத்தில் நிலையான வாழ்வாதாரம் –வசதிகொண்ட வகுப்பினருக்கான கருத்தாக்கமாகவே முடியலாம். அன்றாட வாழ்வாதாரத்துக்கு அல்லாடும் நலிந்த மக்கள் தொடர்பான சிறப்பான ஏற்பாடுகள் இக்காலத்தில் முதன்மையான கவனிப்புக்குரியன.

தனித்திருத்தல் என்ற தாரக மந்திரத்துக்குள் யாரும் புறந்தள்ளப்பட்டு விடக்கூடாது.சமூக இடைவெளி என்பது தனியன்களுக்கிடையிலான பௌதீக தூர மட்டுப்பாட்டினைக்குறிப்பதே தவிர சமூகத்திலிருந்து ஒதுங்குதல் அல்லது ஒதுக்குதல் என பொருள்படாது என்ற புரிதல் மிகமிக முக்கியமானது.

3 ) ஊடகத்துறையிலும் தொடர்பாடல் துறையிலும் நீங்கள் வல்லமை பெற்றவர் என்ற வகையில் தற்போதைய சூழலில் இவற்றின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன ?

வழமை போலவே கொரோனா விடயத்திலும் சமூகப்பொறுப்பான ஊடகங்கள் பக்குவமாய் செயற்படுகின்றன;அதேவேளையில் உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுவது போல ஆதாரமில்லாத – தவறான தரவுகளை தரும் infordemic எனப்படும் நிலை ஆபத்தானது.கொரோனா விடயத்தில் நிறையவே இவ்வாறான நியாயமான விமர்சனங்களை காணமுடிகின்றது.உண்மையில் இந்த சூழமைவின் பதகளிப்புகளை அதிகரிக்கவைப்பதற்குப்பதிலாக மக்களின் உள வல்லமையை காக்கும் –மேம்படுத்தும் பணியில் ஊடகங்கள் பெரிதும் பங்காற்றமுடியும் என்பேன்.
4) அவலமான இந்தச் சூழலிலும் அவசியமே இல்லாத ஆபத்தான போதைப் பொருட்களை நாடி ஓடும் நிலையினை நீங்கள் உங்கள் துறைசார்ந்த நோக்கில் எப்படிப் பார்க்கிறீர்கள் ?

போதைப்பொருள்களை நாடியோடும் நிலைமை அவலமானது. வழமையான பொழுதுபோக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும்போது அல்லது சூழலின் அழுத்தங்களிலிருந்து தற்காலிகமாக தப்பிக்கும் நோக்கில் மக்கள் போதைப்பொருட்களை நாடுகின்றார்கள் எனப்படுவதுண்டு. ஆனால் யதார்த்தம் அதுவல்ல . கொரோனா இல்லாமலேயே- தனிமைப்படுத்தலில்லாமலேயே போதைக்கு அடிமையாகும் நோய் நிலையில் இச் சமூகங்கள் உள்ளன என்பதே உண்மையாகும்.


5) ஆபத்தைக் கொண்டுவரும் கொரனோ வைரசை அரசியல் ஆக்க முனையு ஒரு நிலையும் தோற்றம் பெற முனைகிறது. தங்களின் நோக்கு இதில் எப்படி அமைகிறது….

கொரோனாவின் பிறப்பு பற்றிய அரசியலுக்கான விடை எதுவாக இருந்தாலும் அதன் இருப்பு-பிழைப்பு சார்ந்த அரசியலை ஒரு அரசியல் பிழைப்பாகவே அகிலமெங்கும் காணமுடிகின்றது, குறுகிய இந்த பிழைப்பு அணுகுமுறையும் கூட கொரோனா பெருக்கத்தினை –அவலங்களை அறிவார்ந்து அணுகுதற்கு தடையாக உள்ளது எனலாம்.


6) கொரனோ வைரசின் கோரத்தால் சமயங்களையும் சடங்களையும் உதாசீனம் செய்யும் ஒரு உணர்வு உருவாகியிருக்கிறது. இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள் ?

சமயம்,சடங்குகள் சார்ந்த உதாசீனம் என்பதைவிட அவை சார்ந்த சமுதாய கூடலுக்கான இக்கால தடைகள்தான் நம் கவனத்துக்குரியன என்பேன்.புறத்தே கூடுவதற்கே தடைகள்.ஆனால் அகத்தே,சடங்குகளுக்கு அப்பாலான ஆன்மீக அனுபவங்களை தேடவும் பயிலவும் மிக மிக வாய்ப்பான காலமாக இதனைப்பயன்படுத்த முடியும்.


இந்த ஆன்மீகம் என்பது தனிமைப்பட்ட ,துயருறும் மனிதருக்கு உதவும் மனப்பாங்கின் விரிவுக்கும் வழிசமைக்கும்.

7) பழைமையைப் புறக்கணித்தமையும் புதுமைக்குத் தலைமை கொடுத்தமையும் இயற்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்தியமையுமே கோரரக்கன் கொரனோனவின் வரவென்று குரலெழுகிறது. தங்களின் நோக்கில் இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள் ?

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல நவீன வாழ்வின் கண்மண் தெரியாத வேகத்தின் பாதகவிளைவுகளை கொரோனாவுக்கு முன்னரே இந்த உலகம் அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. இயற்கையை அடிமையாக்கிய நவீனமயமாக்கத்தில் மனத்தின் சுவாசக்காற்றுக்கே பங்கம் விளைந்துள்ளது.


இவைபற்றி எத்தனைஆய்வுகள்,பிரகடனங்கள்,எத்தனங்கள்…;யாரும் கேட்க வில்லை.இப்பொழுது வாகனப்புகையில்லாத வீதிகள், விமானம் பறக்காத வானம்,பாரிய வணிக உற்பத்திச்சாலைகளின் கழிவுகள் இல்லாத சூழலின் நலன்கள் பற்றிய புதிய தரிசனத்தை இந்த சின்னஞ்சிறு நுண் உயிரி தந்திருக்கின்றது. ஆசிய ஐரோப்பிய தொழில் மையபுலங்களில் 40% த்துக்குமேல் சுறுச்சூழல் மேம்பட்ட ஆய்வுத்தரவுகள் எத்துணை மகிழ்ச்சியானவை . ஆனால் வழமைக்கு மீளுதல் என்ற இன்றைய உலக அவசரம் என்பது மீளவும் அழிவான சூழலுக்கு மீளுதலாகவே அமையக்காணலாம்.இந்தப்போக்கு கொரோனா விரிவாக்கத்துக்குமட்டுமன்றி இன்னும் இன்னும் புதிய துயரங்களையே எமதாக்கும்.

இந்த இடத்தில் பாரம்பரிய வாழ்வின் மேன்மைகளுக்கு மீளுதல், நுகர்வுப்பண்பாட்டின் பொருளாதார விதிக்குள் சந்தைப்பண்டமாகி இழக்கப்பட்ட மனித இருப்பிலிருந்து இயற்கையோடு இசைந்த நோயற்ற வாழ்வினுக்கு திரும்புதல் , வாழத் தேவையான உற்பத்தி,சமூக நீதியான உற்பத்தி எனும் சிந்தனைச்சட்டக மாற்றம் பற்றிய பின்னை மேம்பாட்டு சிந்தனையாளர் [ Post development thinkers ] அழைப்பு உலக விதியாதல் வேண்டும்.

8) வயது முதிர்ந்தவர்கள் ஏற்கனவே தனிமையிலே இருக்கும் நிலையில் தற்போது மேலும் நெருக்கடிக்குள் உள்வாங்கப் பட்டிருக்கிறார்கள். முதியோர் இல்லங்களில் இருப்பது ஒரு நிலை. வீட்டில் இருப்பது மற்றொரு நிலை. இரண்டுமே இரண்டுவிதமான தனிமை என நினைக்கிறேன்.இதில் தங்களின் மேலான கருத்தை வெளிப்படுத்தினால் நல்லது என எண்ணுகின்றேன்.

’கொடிது கொடிது முதுமையில் தனிமை’ என மூப்பியல் சார்ந்த என் எழுத்துக் களில் குறிப்பிடுவதுண்டு.கொரோனா சூழமைவில் முதியோர் புறக்கணிப்பு, கருணைக்கொலை சார்ந்த செய்திகள் பயங்கரமானவை.
மீளவும் கூட்டுக்குடும்பவாழ்வின் மேன்மைகளை எமதாகுதலில் இருந்து மூத்தவர்களின் பாரம்பரிய வாழ்வின் பழக்கவழக்கங்களை பயிலும்,பயிற்றும் வாழ் வியல் எமதாகவேண்டும். இதற்கான திட்டமிடலை,திட சங்கற்பத்தினை எடுக்க வேண்டிய மிக முக்கியமான தருணம் இது என்பேன்.

9) தனிமையில் இருக்கும்பொழுது இசைகேட்பது பற்றிய தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்தால் பயனாகும் என்று கருதுகிறேன்.

தனிமையின் சாரத்தை உணர்கிற ,உணர்த்துகின்ற அற்புதப்பொழுதுகளாக இசை அனுபவங்கள் அமைகின்றன.இந்த கொரோனா காலத்து என் சுயம் ,அதன் அர்த்தம் பற்றிய சுய விசாரணையின் சாரமாக,சாட்சியாகவும்கூட இதனைக் குறிப்பிடுவேன்.

இந்த நாட்களில் சில ஆக்க இசை அனுபவங்களை,உள சமூக வல்லமைக்கான படைப்புகளாக தரமுடிந்தமையையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.இவற்றினை சமூக அனுபவமாக பகிரும் நோக்கில் you tube பிலும் தரவேற்றியிருக்கின்றேன்.
உண்மையில் தனித்திருந்து இசையை கேட்பது போல கூட்டாக ,குடும்பமாக ,சிறு குழுக்களாக ஆறுதல் தரும் இசை அனுபவங்களை கேட்பதற்கு இக்காலப்பகுதி மிகவும் பொருத்தமானது என்பேன்.

10) கோரோனாவுக்கு அப்பால் ஒரு சமூகவியலாளனாக நீங்கள் சொல்ல விரும்புவது…

பல்லாயிரம் உயிர்களை கொரோனா காவுகொண்டு வருவது உண்மைதான். ஆனால் கொரோனாவுக்கு அப்பால் சமூக கட்டமைப்புச் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள்,பாரபட்சங்கள் வழியான நோய்களினால் ,வறுமையினால் ,மேலாண்மை அரசியல் ஆதிக்கங்களினால் கொரோனாவையும் விஞ்சி உயிரை இழந்திடும் குழந்தைகள்,பெரியவர் அனைவரையும் பற்றிய கவனிப்பும் ஒருசேரவேண்டும். இவையாவும் பொத்தம் பொதுவான புள்ளிவிபர அளிக்கைகளாக அமையாமை. உரிய சமூகப் பகுப்பாய்வுடனும் வெளிப்படுத்தப்படவேண்டும்.எப்படியோ இந்தக்கொடிய சூழமைவிலிருந்து உலகம் விடுதலை பெறவேண்டும்;அதற்கான வழிவகைகளை ஒன்றுபட்டு காணவேண்டும்.இந்த இடரான காலத்துக்கு இன்றியமையாத
சிந்தனைக்கு வழிசமைத்த தங்களுக்கு என் அன்பான நன்றி.