துரோகி பட்டங்களை வாரி வழங்காதீர்கள்- மனம் வலிக்கின்றது – கலங்கும் பார்த்தீபன்

Parthiban1
Parthiban1

‘தயவு செய்து யோசிக்காமல் துரோகி பட்டங்களை வாரி வழங்காதீர்கள். மனம் வலிக்கின்றது. என்னுடைய அப்பா அம்மா மரணம் அடையும் போது கூட இவ்வளவு வலித்தது கிடையாது. நான் என்னுடைய அப்பாவின் கால்தடம் பற்றி என்னுடைய அம்மாவின் ஆத்ம சாந்திக்காக அரசியலுக்கு வந்தவன். இப்படி வாய்க்கு வந்ததை கதைக்காதீர்கள். சந்தேகம் கொள்ளாதீர்கள்.’ என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினரும் பிரபல பொருளியியல் ஆசான் வரதராஜனின் மகனுமான பார்த்தீபன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் உள்ள சிலரின் நடவடிக்கைகளால் மனம் நொந்து தனது முகநூல் தளத்தில் எழுதிய பதிவொன்றிலேயே பார்த்தீபன் மேற்படி வேண்டுகோளைவிடுத்துள்ளார்.

வரதராஜன் பார்த்தீபன் அவர்களின் முழுமையான முகநூல் பதிவு:

இன்றுடன் என்னுடைய அப்பா அமரத்துவம் அடைந்து 6 ஆண்டுகள் சென்று விட்டன. இடர்களை அனுபவித்தாலும் எத்தனையோவற்றை இழந்தாலும் எத்தடை வரினும் தன்னுடைய மாணவர்களுக்காவும் தமிழ்த்தேசியத்திற்காகவும் இறுதி வரை வாழ்ந்தன் பல சம்பவங்களை நேரில் பார்த்தவன் என்ற வகையில் ஒரு மகன் என்ற அந்தஸ்தையும் கடந்து அவரை நேசிக்கின்றேன்.
இப் பதிவு மிக நீண்ட தாக இருக்கலாம் ஆனால் என் மன வலிகளையும் ஆதங்களையும் சுமந்தது . முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.

1987 ஆண்டு என்று நினைக்கின்றேன் அப்பாவும் மாமாவும் இந்தியா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு சுமார் 2 மாத காலம் பண்டத்தரிப்பு இராணுவமுகாமில் வைக்கப்பட்டிருந்தார்கள். நான் சிறுவனாக இருந்த போதும் சில வேளைகளில் நானும் அம்மாவும் சென்று பார்வையிட்டு வருவம். ஒரு தரம் அப்பாவை பார்வையிட்டும் போது அப்பா ஒரு சிறு கடதாசியைத் தந்து இதனை வரதன் மாமாவிடம் கொடு என்று காட்சிகள் இன்றும் நினைவாக இருக்கின்றது. வீடுதலைப்போராட்டம் வீறு கொண்ட எழுந்த நாட்களில் பறித்தெடுக்கப்படு கின்ற தமிழர்தாயக நிலங்களைபற்றியும் தமிழீழத்தின் சுயசார்பு பொருளா தாரத்தை கட்டியெழுப்புவது பற்றியும் மிகுந்த கரிசனை கொண்டார். துன்னுடைய குடும்பத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டும் என்ற கரிசனையைவிட தன் இனம்சார் தேசத்தின் பொருளாதார வளாச்சி பற்றிய எண்ணமே காணப்பட்டது. மக்களுக்கு எதை கூறுகின்றாராரே அதையே தன் வாழ்விலும் கடைப்பிடித்தும் இருந்தார். தமிழீழ வைப்பகத்தின் முதலாவது கிளை யாழ்ப்பாணம் கன்னாதிட்டி சந்தியில் திறந்து வைக்கப்படும் போது அதில் நீண்ட வரிசையில் நின்று வங்கிகணக்கு திறந்ததும் மறக்கமுடியாத நினைவுகள்.

தான் உழைக்கின்ற பணதில் ஒரு பகுதியையும் அம்மாவுடைய பல நகைகளையும் கொண்டு சென்று கொடுத்தினை அறிந்தும் இருக்கின்றேன். 1996 ஆம் ஆண்டு தன்னுடைய ஒரு பொருளினை தமிழ்ச்செல்வன் அண்ணாவிடம் கொடுத்த போது சேர் உங்களுக்காக வைத்திருப்பது இது ஒன்றுதான் உங்களிடமே இருக்கட்டும் நான் தேவைப்படால் உங்களிடம் கேட்கின்றேன் என்று தமிழ்ச்செல்வன் அண்ணா கூறியதைக் கேட்டும் இருக்கின்றேன்.

இவ்வாறு எனக்கு தெரிந்த பல விடயங்களை இங்கு குறிப்பிடலாம். ஆதை விட எனக்கு தெரியாத விடயங்கள் பல பல. அதை மற்றவர்களிடம் இருந்து கேட்டு ஆச்சரியப்பட்டும் பெருமை கொண்டும் இருக்கின்றேன். 2006 ஆண்டு காலத்தில் தமிழேந்தியப்பாவுடைய கனவான ஒரு முக்கியமான ஒரு பொறுப்பினை அப்பாவுக்கு கொடுக்க முன்வந்தபோது அப்பா அவருக்குச் சொன்னது இன்றும் நினைவில் உள்ளது. இல்லை நான் எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை. நான் எப்பவும் என்னுடைய மாணவர்களுக்கு ஒரு ஆசிரியனாகவே இருக்க ஆசைப்படுகின்றேன் என்றார்.

என்னுடைய மாணவர்கள் பொருளியலை மட்டும் கற்பிக்கின்ற மாணவர்களாக இருக்க கூடாது தன் இனம்சார்ந்து மொழி சார்ந்து தமிழ்த்தேசத்தின் இருப்பு அதன் பொருளாதாரம் குறித்து சிந்திக்கின்ற செயற்படுகின்ற மாணவர்களாகவே இருக்க வேண்டும் என்பார். அவ்வாறே வகுப்பறைகளில் செயற்பட்டதையும் கண்டு கொண்டுள்ளேன்.
குடும்பமாகச் சென்று சில நாடுகளில் போய் குடியேறக்கூடிய சந்தர்ப்பங்கள் தானாகவே வந்த போதும் நானும் எனது பிள்ளைகளும் இந்த மண்ணிலேதான் மரணிப்போம் என்று கூறியதுடன் அதையும் செயல் வடிமாக்கினார்.

இறுதிவரை தன் மாணவர்களுக்காக வாழ்ந்தார். நான் என்று இந்த சோக்கை விடுகின்றேனோ என்று என் உயிரையும் விட்டு விடுவேன் என்று கூறுவார் அவ்வாறே சோக்கை கைவிட்ட நாளில் இருந்து 11 வது நாள் தன்னுயிரையும் விட்டார்.

கொடிய தாக்கத்தினால் தீராத வலியால் துடித்துக் கொண்டிருந்த நேரத்திலும் தன் மாணவர்களுக்காக வாழ்ந்தார் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. 11.08.2014 அன்று காலை வீட்டில் இருந்து அப்பாவை வைத்தியசாலையில் சேர்ப்பித்தோம். அன்று வீட்டில் இருந்து செல்லும் போது என்னுடைய கையில் தந்தது ஒரு பென் ரைவ். கவனம் பத்திரிகைகளுக்கு கொடுத்து விடு என்றார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொருளியல் பரீட்சை வினாத்தாளில் இடம்பெற்ற பிழைகள் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை. வீட்டில் இருந்து இறுதி இரண்டு நாட்களாக இரவிரவாக கண் விழித்து நோயின் தாக்கத்துடன் அவர் எழுதினார். அக் கட்டுரை அவர் மரணித்த பின்னர் 20.08.2014 அன்று தினக்குரல் பத்திரிக்கையில் வெளியானது.

அப்பா மரணக்கும் நாளுக்கு முதல்நாள் இரவு ‘என்னைக் கட்டிப்பிடித்து கொஞ்சு’ என்றார் ஒரு நாளும் அவ்வாறு நடந்து இல்லை. நான் போயிற்று வாறன். உனக்கு வேறு ஒன்றும் சொல்லத் தேவையில்லை. அம்மாவா பார்த்துக்கொள். அம்மாவுடன் சண்டை போடாதே. என்றார். அம்மா விடம் நான் என்னுடைய உணர்வுகளுக்காகவே வாழ்ந்து முடித்தேன் உங்களுக்கு என்று நான் எதுவும் செய்யவில்லை என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். அதன் சுய நிலையை இழந்தவர் 18.08.2014 மாலை 2.14 மணிக்கு சென்று இறந்து விட்டார்.

அப்பாவின் அதே உணர்வுடன் எனது அம்மா மரணிக்கும் வேளையில் அவர்களுக்கு ஒரு நின்மதியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் தேர்தல் அரசியலுக்கு வந்தேன்.
2020 நான் இந்த தேர்தல் அரசியலில் விமர்சனத்திற்கு உள்ளான ஆண்டு அவமானப்படுத்தப்பட்ட ஆண்டு அதுவும் வேறு நபர்களால் அல்ல என்னோடு இருந்தவர்களால்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் என்னுடைய நண்பன் ஒருவர் முகப்பு புத்தகத்தில் போட்ட பதிவிற்காக என்னை விமர்சித்தார்கள். பின்னர் நான் சார்ந்த நிறுவனம் ஒன்றின் இடர்கால மனிதாபின பணிகளின் போது ஒரு படத்தில் இராணுவம் நின்றது என்று என்னை இராணுவம் சார்ந்தவன் என்று முகப்பு புத்தகத்திலும் பல இடத்திலும் என்னையும் என் தமிழ்த்தேசிய உணர்வையும் கேள்விக்குட்ப டுத்தினர். என்னை கபடதாரி கழுவ வேண்டிய கறை, புல்லுருவி என்று வார்த்தைகளால் வர்ணித்தார்கள். இன்று எனக்கு பின்னால் ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது. நான் றோ. இந்தியக் கைக்கூலி என்று கூறுகின்றார்கள்.

கஜேந்திரகுமார் அண்ணாவின் கொள்கை தவறாத நேர்மையான அரசியல் பயணத்தினை ஏற்று அதற்காக இந்த தேர்தல் அரசியலுக்கு வந்தேன். அவரின் கொள்கை தவறாத அரசியல் பயணத்தை இன்றும் அதனை நான் உளமார ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஆனால் அவர் தவிர்ந்த வேறு ஒரு சிலரது விமர்சித்தல் துரோகிப்பட்டங்களை உடன் வழங்குதல், ஏதாவது ஒரு கருத்தினை கூறினால் அவரையாரோ இயக்குகின்றார்கள். அவருக்கு பின்னால் நிகழ்ச்சி நிரல் உள்ளது என்று கூறும் ஒரு சிலரின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் பாரிய சிதைவுகளை ஏற்படுத்தும்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு ஒருவர் முன்னர் என்னுடைய அப்பாவின் நினைவுநாள் நிகழ்வு ஒன்றில் வரதன் சேரினால் தான் நான் இந்நிலைக்கு வந்தேன். என்று பல விடயங்கைள மேடையில் சொல்லி முழங்கி விட்டு தற்போது வரதராஜன் சேர் போல் அவர் மகன் பார்த்திபனும் துரோகி என்று கூறுகின்ற நிலையும் காணப்படுகின்றது. அப்படி என்றால் வரதன் சேர் ஒரு துரோகி என்று மனதில் நினைத்துக் கொண்டு எவ்வாறு அவருடைய ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் அவரைப்பற்றி பெருமையாக பேச முடிகின்றது. ஆக குறித்த நபர் மேடையில் முழுங்குவது எல்லாம் இவ்வாறு தானா?

பல ஆசிரியர்கள் என்னிடம் என்ன உனக்கு பின்னால் ஏதோ நிகழ்ச்சி நிரல் உள்ளதாம் நீ இந்தியாவின் ஆளாம் என்று கேட்கின்றார்கள். நல்லூர் திருவிழா நான் சிறுவயது முதலே தவறாமல் செல்லும் ஒரு விடயம். அங்கு வருகின்ற பலர் இவ்வாறே வினாவுகின்றார்கள். ஆனால் ஒரு மகிழ்ச்சி தரும் விடயம் என்னவென்றால் நான் றோ இல்லை என்றும் எனக்கு பின்னுக்கு எந்த நிகழ்ச்சி நிரல் இல்லை என்றும் நான் சொல்லவேண்டிய தேவை எனக்கு ஏற்படவில்லை. ஏன்டா உன்னை பற்றி இவர்கள் இப்படிச் சொல்லுகின்றார்கள் என்று சொல்லுகின்றவர்களைத்; தான் தப்பாக நினைக்கின்றார்கள்.

ஏன் பார்த்திபன் அண்ணாவை இப்படி முகப்பு பக்கத்தில் விமர்சிக்கின்றீர்கள் என்று என்னுடைய ஒரு நண்பன் கேட்டதற்கு, என்னுடைய அப்பாவின் நிகழ்வில் பேசி விட்டு அப்பாவைப் போல் நானும் துரோகி என்று கூறியவர் சொன்னாராம் ‘இது தான் அரசியல் உனக்கு அரசியல் தெரியாது’ என்று எனது நண்பன் மேலும் வாதிட ‘நீ என்ன பார்த்திபனுடைய சட்டத்தரணி போல் கதைக்கின்ற எனிமேல் என்னுடன் அரசியல் கதைக்காதே’ என்று கூறினாராம் அந்த சட்டத்தரணி.

எனக்கு பின்னால் நிகழ்ச்சி நிரல் உள்ளது நான் துரோகி இந்தியாவின் கைக்கூலி என்று சொல்லித்திரிகின்ற அவருக்கும் அவருடன் இணைந்த சிலருக்கும் மற்றும் அவருடைய சிறுவர்கள் சிலருக்கும் ஒன்றைச் சொல்லுகின்றேன். இந்த அரசியல் பயணத்திலும் சரி என்னுடைய தொழில் மற்றும் வாழ்வியலில் மக்களை ஒரு துளியும் ஏமாற்றாமல் மக்கள் மீது அதிகாரம் செலுத்தாமல் பொய் பேசாமல் நேர்மையாகபயணிப்பது நீங்களா நானா என்பது தொடர்பாக நான் உங்களுடன் நேரடியாக விவாதிக்க தயாராக உள்ளேன். உங்களால் முடிந்தால் இதை ஏற்றுக்கொண்டு வாருங்கள். ஒருவராக சந்தித்து பார்த்திபனுக்கு நிகழ்ச்சி நிரல் உள்ளது அவன்ர கைக்கூலி இவனுடைய கைக்கூலி என்று சொல்லுவதை விட்டு விட்டு அத்தனை மக்களையும் ஒன்றாக கூட்டி எனக்கு பின்னால் ஒரு சிறு துளியேனும் நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது நான் இந்தியாவின் கைபிள்ளை என்று அவர்களுக்கு முன்னால் தெரிவியுங்கள் நிரூபித்துக் காட்டுங்கள் முடியும் என்றால்.

அரசியலில் பின்கதவு பற்றி மேடையில் கதைக்கின்றவர் ஏன் பின்கதவால் நான் துரோகி என்று பிரப்புரை செய்ய வேண்டும். உங்களிடம் நேர்மையிருந்தால் துணிவிருந்தால் உண்மையிருந்தால் மக்களுக்கு முன்னால் நிருபித்துக் காட்டுங்கள்.

மற்றவர்கள் சொல்லி நடப்பதற்கும் என்னை மற்றவர்கள் தான் வழிநடத்து வதற்கும் நான் என்ன பகுத்தறிவற்ற மனிதனா? ஒரு சிலருடைய கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்தைக் கூறினால் அது நிகழ்ச்சிநிரலா? வெள்ளைக்காகம் பறக்கினறது பார் என்று சொல்லும் போது ஆம் வெள்ளைக் காகத்துடன் இரண்டு வெள்ளைக் காகக் குஞ்சுகளும் போகின்றது என்று யால்ரா அடிக்கின்ற அரசியலை நான் என்றும் எப்போதும் யாருக்காகவும் செய்யப்போவதில்லை. பல பட்டி மன்றங்கள் செய்திருப்பீர்கள் சரியா பிழையா என்று வாதிட்டிருப்பீர்கள் அங்கு வாதிடுபவர்களுக்கு பின்னாலும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் உள்ளதா? நீங்கள் என்னை றோ தான் இயங்குகின்றது என்று சொன்னத்தை பலர் என்னிடம் கேட்ட பிற்பாடு தான் நான் றோவுக்கான ஸ்பெலிங்கையும் அதன் விரிவாக்கத்தையும் கூகுளில் தேடிப்பார்த்தேன் அவ்வாறு உள்ளது நிலமை.

மக்கள் என்னை நம்புகின்றார்கள் என்பதற்காக நானும் என்னுடைய கருத்தை சொல்லாமல் இருக்க முடியாது. இந்த நிமிடம் வரை என்னை யாரும் கையாளவில்லை. யாரடைய நிகழ்ச்சி நிரலுக்கும் நான் செயற்படவே இல்லை. அப்படி யாரும் என்னை அணுகவும் இல்லை. நான் இந்தியன் றோவோ அல்லது அமெரிக்கன் சி.ஐ.டியோ அல்ல. நான் நானாகவே என்றும் இருப்பேன். இது என்னுடைய அம்மா அப்பாவுக்கு நான் செய்த இறுதிக் கிரிகைகள் மீதும் அவர்களின் ஆத்மா மீதும் ஆணை.

தயவு செய்து யோசிக்கால் இவ்வாறு துரோகி பட்டங்களை வாரி வழங்காதீர்கள். மனம் வலிக்கின்றது. என்னுடைய அப்பா அம்மா மரணம் அடையும் போது கூட இவ்வளவு வலித்தது கிடையாது. நான் என்னுடைய அப்பாவின் கால்தடம் பற்றி என்னுடைய அம்மாவின் ஆத்ம சாந்திக்காக அரசியலுக்கு வந்தவன். இப்படி வாய்க்கு வந்ததை கதைக்காதீர்கள். சந்தேகம் கொள்ளாதீர்கள். எனக்கு மட்டுமல்ல என்னுடைய நண்பர்களாக இருக்கின்ற பல செயற்பாட்டாளர்கள் உங்கள் வார்த்தைகளால் மனமுடைந்து ஒதுங்கி இருக்கினார்கள் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

எந்த அடிப்படையில் எதை ஆதராமாகக் கொண்டு இந்த துரோகி நிகழ்ச்சி நிரல் பட்டங்கள் வழங்கப்படுகின்றன ? இதன் எதை சாதிக்கின்றீர்கள்.
இதற்குப் பிறகும் நீங்கள் எதைவேண்டும் என்றாலும் சொல்லிவிட்டு போங்கள். உங்களால் புகழப்படும் போது நான் வானத்தில் பறக்கவும் இல்லை உங்களால் இழகப்படும் போது பூமிக்குள் புதைந்து போகப்போறதும் இல்லை. நீங்கள் என்னை ஒதுக்கலாம் எதற்கும் சொல்லாமல் என்னப் புறக்கணிக்கலாம் எனக்கான அங்கீகாரத் தினை தராமல் விடலாம். அது பற்றி நான் கவலை கொள்ளப்போவதில்லை.

நேர்மையாக இந்த அரசியல் தளத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கையை தடம் பற்றி நான் தனியாகவேனும் தொடருவேன்.

வரதராஜன் பார்த்திபன்