அதியுச்ச சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் ’20’ வரைவை ஓரணியில் திரண்டு எதிர்ப்போம் :பிரதான எதிர்க்கட்சிகள் சூளுரை!

20 800x425 1
20 800x425 1

“நாட்டில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தலைமையிலான அதியுச்ச சர்வாதிகார ஆட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் அடித்தளம் இட்ட அரசமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டத்தை அப்படியே ஒத்ததாகவும், நல்லாட்சிக்கு வழிவகுத்த 19ஆவது திருத்தச் சட்டத்தின் பெரும்பாலான உள்ளடக்கங்கள் அடியோடு நீக்கப்பட்டும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில் இந்தத் திருத்தச் சட்டமூலத்தை நாம் ஓரணியில் நின்று எதிர்ப்போம். நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் மக்களை அணிதிரட்டி இதற்கு எதிராகப் போராடுவோம்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய எதிர்க்கட்சிகள் கூட்டாகத் தெரிவித்தன.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை நேற்றுமுன்தினம் அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து இந்தத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையிலேயே அரசமைப்பின் கடந்த நல்லாட்சியில்18ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினோம். அதன்பிரகாரம் 19ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தோம். இதற்கு ராஜபக்ச அணியினரும்கூட சபையில் அன்று ஆதரவைத் தந்திருந்தார்கள்.

 19ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய நாடாளுமன்றத்துக்கு அதியுச்ச அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. அரசமைப்புப்  பேரவையும் உருவாக்கப்பட்டது. சுயாதீன ஆணைக்குழுக்களும் நியமிக்கப்பட்டன.  நாடாளுமன்றமும் நீதித்துறையும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் சுதந்திரமாக இயங்க அனுமதி கிடைத்தது. ஆனால், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் இவற்றில் பழையபடி ஜனாதிபதியின் தலையீடுகள் வந்துள்ளன.

அரசமைப்புப்  பேரவை நீக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் குறைக்கப்பட்டுள்ளன. பிரதமரை நியமிக்கும் அதிகாரமும், பிரதம நீதியரசரை நியமிக்கும் அதிகாரமும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரமும் மீண்டும் ஜனாதிபதி வசம் சென்றுள்ளன.

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்க 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் சகோதரரான பஸில் ராஜபக்சவை நாடாளுமன்றத்துக்கு வரவழைத்து அவருக்குப் பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவியை வழங்கி கோட்டாபய – மஹிந்த – பஸில் தலைமையிலான குடும்ப ஆட்சியையும்,  அதியுச்ச சர்வாதிகார ஆட்சியையும் நிலைநிறுத்தவே இந்த நடைமுறை வந்துள்ளது. இது எந்தவகையில் நியாயமானது?

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்ட நிறைவேற்றம் நாட்டின் ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறினால் அது ஜனநாயகத்துக்குச் சாவு மணியாக –  நாட்டுக்குச் சாபக்கேடாக அமையும். எனவே, 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இடமளியோம். அதை எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று எதிர்க்கும். நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் மக்களை அணிதிரட்டி இந்தத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகப் போராடுவோம்” – என்றனர்.