ஒற்றுமையை வலியுறுத்தவே இங்கு வந்தேன்: சுமந்திரனின் இரவு விருந்தில் மாவை!

c17c58ef d8f1 4902 9b41 c590a45b3a1a 696x522 1
c17c58ef d8f1 4902 9b41 c590a45b3a1a 696x522 1

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, இனத்தின் விடுதலைக்காக நாம் ஒன்றுபட்டு செயற்படும் முயற்சியை மேற்கொள்வோம். இதற்காகவே இந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டுள்ளேன் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்

நேற்று (5) சிறுப்பிட்டியில் தனது ஆதரவாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்களிற்கு எம்.ஏ.சுமந்திரன் இரவு விருந்தளித்தார். இதற்காக பல பகுதிகளிலும் பேருந்துகள் அனுப்பப்பட்டு ஆட்கள் ஏற்றிவரப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, மாவை இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னுடைய வாழ்நாள் முழுவதும் பலமுறை நான் விழுந்து விட்டேன், கொல்லப்பட்டேன் என பல சந்தர்ப்பங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால், நாங்கள் அவ்வாறான காலகட்டங்களை மீறி எழுந்து வந்தபோது- வீழ்த்தப்பட்டுவிட்டேன், கொல்லப்பட்டு விட்டேன் என சொல்லப்பட்ட நேரத்தில்- எழுந்து வந்து முன்னரைவிட மிக பலமாக இனத்தின் விடிவிற்காக என்னை அர்ப்பணித்து வந்திருக்கிறேன்.
இன்றைக்கும் நான் தோற்கடிக்கப்படவில்லையென என்னை நான் மதிப்பீடு செய்யவில்லை. உலகில் எத்தனையோ பெருந்தலைவர்கள் ஆட்சியை இழந்து, தேர்தலில் தோற்று, போரில் தோற்றுள்ளனர். மிகப்பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மீண்டெழுந்து ஆட்சியமைத்துள்ளனர்.

நாங்கள் ஆட்சியமைப்பதற்கான போராட்டத்தில் ஈடுபடவில்லை. தமழர்களின் விடுதலைக்காக இந்த மண்ணில் போராடுகிறோம். இலட்சக்கணக்கான மக்களை இழந்து விடுதலை பயணத்தை மேற்கொள்ளும் நாம், தோற்றுவிட்டோம் என்றோம், ஆட்சியழந்து விட்டோம் என்றோ வீழ்ந்து கிடக்க தேவையில்லை.

அப்படித்தான் வரலாற்றில் பல தலைவர்கள், தளபதிகள், போராட்ட வீரர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். அதை நாம் பின்பற்ற வேண்டும்.

தேர்தல் காலத்தில் எனக்கு வாக்களியுங்கள் என நான் கேட்பது அரிதாக இருந்தது. கடிதம் ஒன்றை அனுப்பி வைப்பேன். எல்லோரும் வெற்றிபெற வேண்டும்- யார் மோசமாக தாக்கப்பட்ட, பாதிக்கப்பட்டு வந்தார்களோ, அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டுமென்பதே நான் இதுவரை ஆற்றிவந்த பணி. அப்படி வெற்றிபெற்றிருக்கிறோம்.

இம்முறை எத்தனையோ விமர்சனங்கள் இருந்தபோதும், அதிலிருந்து விடுபட்டு- எமது மக்களின் முன் ஒற்றுமையை நிரூபித்து, விமர்சனங்களிற்கு அப்பாலும் எமது இனம் வெற்றிபெற வேண்டுமென இந்த தேர்தலில் செயற்பட்டோம். தேர்தல் மட்டுமே, ஜனநாயகம் மட்டுமே இனத்தின் வெற்றியை தீர்மானிப்பதில்லையென்றபோதும், போராட்டம் மட்டுமே வெற்றி பெறுமென்பதை வரலாறாக கண்டிருக்கிறோம்.

தேர்தல் காலத்தில் ஒன்றுபட்டு நிற்காவிட்டாலும், இனிமேல்- தேர்தலில் வெற்றிபெற்றாலும், வெற்றி பெறாவிட்டாலும்- மக்களின் விடுதலைக்கான பொதுவேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஒன்றுபடும் முயற்சியை எடுப்போம்.

நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்- தமிழ் அரசு கட்சிக்குள் நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அதற்கான முயற்சியாகத்தான் நான் இங்கு வந்தேன் எனவும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.