பௌத்தர்கள் என்றால் சிங்களவர்கள் மட்டும் என எண்ணுவது மடமை-விக்கி

.jpg
.jpg

அண்மையில் திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள திரியாய் என்ற இடத்தில் கிழக்கு மாகாணத் தொல்பொருள் செயலணியைச் சேர்ந்த பிக்கு ஒருவர் 1000 ஏக்கர் காணிகளில் இதுவரை காலமும் பயிர் செய்து வந்த விவசாயிகளை குறித்த காணிக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று பயமுறுத்தியமையை பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ள யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இதனால் தான் தமிழ் மக்கள் காணி அதிகாரம் தமது கைகளில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன் கிழமை நடைபெற்ற இடைக்கால கணக்கு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு விக்னேஸ்வரன் உரையாற்றினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

மாகாண சபைக்கு காணி அதிகாரங்கள் கொடுக்கக் கூடாது என்று எம்மவர் சிலர் கூறி வருகின்றார்கள். இந்த விடயத்தை அவர்கள் கருத்தில் எடுக்க வேண்டும். எங்கிருந்தோ வந்த ஒரு புத்த பிக்கு எமது மக்களைத் தமது பாரம்பரிய காணிகளில் தமது பாரம்பரிய தொழிலை நடத்த விடாது தடுக்கின்றார் என்றால் காணி அதிகாரம் எமக்கு இருக்கக் கூடாதா?.

திரியாயில் தமிழ் மக்கள் விவசாயம் செய்வதற்கு தடைசெய்யப்பட்ட இடங்களில் இருப்பதாக கூறப்படும் தொல்பொருள் ஆராய்விடங்கள் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடமா சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்த இடமா என்று கூட இதுவரையில் ஊர்ஜிதப்படுத்தவில்லை. அதனால் தான் வரலாறு தொடர்பில் ஆராய்வதற்காக ஒரு வரலாற்று ஆய்வாளர்களை கொண்ட ஆணைக்குழுவை அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.

இவை தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களென்றால் அவற்றைப் பாதுகாக்கும் கோரிக்கை தமிழ் மக்களிடம் இருந்து வரவேண்டுமேயொழிய சிங்களவரை மட்டும் உள்ளடக்கிய செயலணியில் இருந்து வரக்கூடாது. ஆகவே தான் சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் வேற்றுநாட்டு தென்னாசிய வரலாற்று வல்லுநர்களைச் சேர்த்து ஆணைக்குழுவொன்றை கூட்டி சிங்கள மொழி பேசுவோர் பற்றிய முழுவிபரங்களைச் சேகரிக்கச் சொல்லியுள்ளேன். பௌத்தர்கள் என்றவுடன் அவர்கள் சிங்களவர்களே என்று எண்ணுவது மடமை.

உள்ளூர் பொருளாதாரத்தை தீர்வைகள் ஊடாக பகுதியாக மேம்படுத்தும் பொருளாதாரக் கொள்கையுடையதாக இந்த அரசாங்கம் இருப்பதை நான் அவதானிக்கின்றேன். இதனை நான் வரவேற்கின்றேன். எமது கட்சியாகிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அரசியலில் தன்னாட்சி, பொருளாதாரத்தில் தன்நிறைவு தனி மனித மற்றும் சமூக ரீதியில் தற்சார்பு என்ற குறிக்கோள்களை கொண்டுள்ளது. உற்பத்தி மற்றும் பொருளாதார துறையில் தன்னிறைவு நோக்கி நாங்கள் பயணிப்பது இன்று அதிமுக்கியமாயுள்ளது. எமது சர்வதேச கடன்கள் கட்டு மீறி உயர்ந்துள்ள நிலையில் தன்நிறைவு நோக்கி நாம் நகர்வது அவசியமாகியுள்ளது. எமது வெளிநாட்டு செலாவணிகளைச் சேமிக்க வேண்டியுள்ளது. இது பற்றிய பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

நான் முதலமைச்சராக இருந்த போது உலக வங்கி நிபுணர் ஒருவர் என்னைச் சந்தித்தார். நெற்செய்கையின் போது எமது விவசாயிகள் தமது செலவுகளை ஈடு செய்ய முடியாத வருமானத்தையே பெற்று வருவதாக அவர் கண்டிருந்தார். ஆகவேதான் நாங்கள் தொடர்ந்தும் நெற் செய்கையில் ஈடுபடுவது எமக்கு பலனை அளிக்காது என்று கூறி தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு அரிசியை வாங்க வேண்டும் என்று கூறினார். அவரின் சிந்தனை உலகளாவிய ரீதியில் சென்றதில் வியப்பில்லை! எமது நெற்காணிகளை இனிமேல் சிறு பயிர்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார். எமது மக்கள் சிவத்த அரிசியையே விரும்புகின்றார்கள் என்றும் வெள்ளை அரிசியை அவர்கள் பாவிக்க மாட்டார்கள் என்றும் கூறி, செலவு எவ்வாறெனினும் எமது அடிப்படை உணவான அரிசிக்கான நெல்லை தொடர்ந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தேன்.

அத்துடன் நவீன முறைகளை நெல் உற்பத்தியில் நாங்கள் பாவிக்க வேண்டும் என்றும் எந்தவித அவசர தேவைகளுக்கும் நாங்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் கூறினேன். தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து அரிசி கிடைப்பது போர் போன்ற சில காரணங்களின் நிமித்தம் தாமதமானால் எமது மக்கள் பட்டினியில் இருக்க முடியாது என்றேன். அதற்கு அவர் நெல்தான் வேண்டியவாறு வேறு நாடுகளிலும் கிடைக்கின்றதே என்றார். போர்க் கால விபரீதங்கள் எம்மால் கணிக்க முடியாதவை என்று கூறினேன்.

கோவிட் – 19 நோய்ப் பரவல் எமது உணவு சம்பந்தமாக நாம் தன்னிறைவு அடைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. தன்னிறைவு மட்டுமல்ல அதற்கு அப்பாலுஞ் சென்று ஏற்றுமதி செய்யக் கூடிய அளவுக்கு நெல் விவசாயம் அமைய வேண்டும் என்பதே எமது கருத்து. அத்துடன் எமது உற்பத்திக்கு பெறுமதி சேர்த்து எவ்வாறு ஏற்றுமதி செய்யலாம் என்பது பற்றியும் ஆராய வேண்டும். இதற்காக அரசாங்கம் விவசாயிகளுக்குப் போதிய அனுசரணைகளை வழங்கி நெல் உற்பத்தியை வலுவடையச் செய்ய வேண்டும். பெறுமதி சேர்ப்பது பற்றி அறிவுரை வழங்க வேண்டும். ஏற்றுமதி செய்யவும் அரசாங்கம் உதவி புரிய வேண்டும்.

வடக்கில் எமது கட்சி வீட்டுத் தோட்டங்களை பிரபல்யப்படுத்தி வருகின்றது. பலர் தமது இல்லங்களில் தமக்கு வேண்டிய நாளாந்த மரக்கறி தேவைகளிற் சிலவற்றையேனும் தொட்டிகளில் பயிரிட்டு பலன் பெற்று வருகின்றார்கள். நான் அரசியலுக்கு இழுத்து வரப்பட முன் நான் கொழும்பில் வசித்து வந்த வீட்டின் மாடியில் பல மரக்கறி வகைகளைப் பயிரிட்டுப் பலன் பெற்று வந்திருந்தேன்.

தன்னிறைவு நோக்கி நகர்வதாவது போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பல நன்மைகளைக் கொண்டு வரும். பலவிதமான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து நிற்கும் ஒரு நாடு தன்னிறைவை நோக்கி நடப்பதே நன்மை பயக்கும்.


அத்துடன் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பது எமது மக்களிடையே தொழில்களை ஊக்குவிக்க உதவும். போரினால் பாதிக்கப்பட்ட எமது இடங்களில் வேலையில்லாதவர்களின் தொகை 10 சதவிகிதங்களுக்கு அதிகமாக உள்ளது. நாட்டின் விகிதம் சராசரி 6 சதவீதத்திற்குக் குறைவாகவே இருக்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் வேலையில்லாத நிலைமையினைக் குறைக்க உடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

போதிய திட்டமிடலுக்குப் பின்னரான உற்பத்தி மேம்பாட்டு நடவடிக்கைகள் வேலையில்லாத நிலைமையை வெகுவாகக் குறைக்கும். அத்துடன் அபிவிருத்திக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு குடும்பத்தில் ஒருவர் எனினும் வேலையொன்றைப் பெற நாங்கள் பாடுபட வேண்டும். இதன் பொருட்டு வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் பல குடும்பங்கள் பயன் பெற்று வாழ்வார்கள்