முன்னாள் போராளிகளின் வளர்ச்சிக்கு அரசு உதவி செய்யவில்லை- பிரபாகரன் அர்சேனித்தா

student
student

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில் முன்னாள் போராளிகளின் வளர்ச்சிக்காக அரசு எந்தவொரு உதவியும் செய்யவில்லை என இளம் தமிழ் மாணவர் என்ற அமைப்பின் சார்பாக உரையாற்றிய பிரபாகரன் அர்சேனித்தா தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர், கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.

குறித்த தொடரில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, இன அழிப்பு நடந்து 11 ஆண்டுகள் முடிந்த பிறகு தமிழர்களின் பொருளாதாரம் மிகவும் பின்னடைந்துள்ளது. மோசமான மாற்றங்களை அடைந்துகொண்டிருக்கின்றன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென தொடர்ந்து போராடுகின்ற தாய்மார்கள், பேரினவாத இராணுவத்தால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர்.

இராணுவம் தொடர்ந்து முன்னாள் போராளி குடும்பங்களை துன்புறுத்தி வருகின்றது.அரசாலோ பன்னாட்டு அமைப்புகளாலோ அவர்களது வளர்ச்சிக்காக எவ்வித உதவிகளும் செய்யவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.