20வது திருத்தத்தினால் ஜனநாயகத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை ஐ.நா.வில் எடுத்துரைத்த அருட்தந்தை!

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20வது திருத்தச் சட்டமூலம் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையுமென அருட்தந்தை ஆ.குழந்தைசாமி, ஐ.நா.வில் எடுத்துரைத்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 45வது கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெற இருக்கின்றது.

அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 6 தொடர்பான பொது விவாதத்தில் ‘தமிழ் உலகம்’ என்ற அமைப்பு சார்பாக உரையாற்றிய அருட்தந்தை ஆ.குழந்தைசாமி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“புதிய அரசியல் அமைப்பு அதிகார பகிர்வின் அடிப்படைக் கொள்கைகளை தெளிவாக,வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மேலும், புதிய அரசமைப்பை உருவாக்கும்போது உருவாக்க உரிமையுள்ளவர்களுக்கு உரிய இடத்தை வழங்கவேண்டும்.

20வது அரசமைப்பு திருத்தச் சட்டம், ஜனாதிபதிக்கு தனது ஆட்சிகாலத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்கிறது. ஜனாதிபதி தனக்கு எத்தனை அமைச்சுகளையும் வைத்துகொள்ளலாம். நாடாளுமன்றபேரவை நாடாளுமன்ற உறுப்பினர்களால் மட்டும் உருவாக்கப்படுகிறது.

இதனால் பிற நாடாளுமன்ற கட்சிகளிருந்து உறுப்பினர்களையும் திறமைவாய்ந்த, ஒழுக்கமுள்ள நபர்களையும் சேர்க்காமல், இலங்கையின் பன்மைத்தன்மையை அழிக்கிறது.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஓராண்டுக்குபிறகு எப்பொழுது வேண்டுமானாலும் தலைமை அமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் கலைக்க அதிகாரம் உண்டு.

அதேபோன்று தலைமை அமைச்சர், அவரால் பரிந்துரைசெய்யப்பட்ட இருவர், எதிர்கட்சி தலைவர், அமைச்சர், இராஜாங்க அமைச்சர், இணை அமைச்சர் ஆகியோரை எப்பொழுது வேண்டுமானாலும் ஜனாதிபதி நீக்கலாம்,எவரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்.

இதனால் நடாளுமன்ற பேரவை அரசியலமைப்பு பேரவையைவிட பலவீனமாகக்கப்பட்டுள்ளது. தேசிய உருவாக்க அமைப்பையும் சேவையை தணிக்கை செய்யும் அமைப்பையும் கலைத்துவிட்டார். எத்தனை அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் வேண்டுமானாலும் நியமிக்கலாம்.

ஜனாதிபதியின் சர்வதிகாரம் இலங்கையில் மக்களாட்சியை அகற்றியது. மக்களாட்சி அழிப்பு சர்வதிகாரத்தை பெற்றெடுக்கும். அது தமிழ் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே இந்த பேரவை, தமிழ் மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.