கூட்டமைப்பின் தலைமையுடன் பேசியே அடுத்தகட்ட தீர்மானம்! – மாவையிடம் நேரில் வலியுறுத்தினார் சம்பந்தன்

1560884704 ty
1560884704 ty

தமிழ் மக்களின் பொது விடயங்களுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதில் தவறு இல்லை. அதற்கும் அப்பால் கட்சி ரீதியான முடிவுகளுக்குக் கூட்டமைப்பின் தலைமையுடன் பேசிய பின்பே அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க வேண்டும்என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் .

நேற்றுப் பகல் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இரவு சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், யாழ்ப்பாணத்தில் கூடும் 10 தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பினார். அதில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் அது தொடர்பான நிலைப்பாடுகள் தொடர்பான கேள்விகளை அடுக்கினார்.

இதன்போது கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதனின் விடயத்தை ஆமோதித்து உரையாற்றினார்.

குறித்த விடயத்துக்குப் பதிலளித்து உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா, “தற்போது நாட்டிலுள்ள நெருக்கடிகள் மற்றும் தமிழ் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்காக உருவான அமைப்பே 10 தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டணி” என்று பதிலளித்தார்.

“தமிழ் மக்களின் பொது விடயங்களுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதில் தவறு இல்லை. அதற்கும் அப்பால் கட்சி ரீதியான – முடிவுகளுக்குக் கூட்டமைப்பின் தலைமையுடன் பேசிய பின்பே அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க வேண்டும்” – என்று இதன்போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தினார்.