நாட்டில்தமிழர்களின் இருப்பைக் கேள்விக் குறியாக்குகின்ற அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன-கலையரசன்

IMG 20201010 104329
IMG 20201010 104329

எங்களுடைய தமிழர்களின் நிலையான இருப்பைக் கேள்விக் குறியாக்குகின்ற அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. தலையைத் தடாவி கழுத்தை அறுக்கின்ற செயற்பாடுகளும், எம்மை ஆதரிப்பதாக, அரவணைப்பதாகக் கூறி எம்மை இல்லாமல் செய்கின்ற செயற்பாடுகளும் எமது சமூகத்திற்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல்நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

IMG 20201010 110805
IMG 20201010 110805

முறிகண்டி நேசக்கரங்கள் அமைப்பின் மூலம் வீரமுனை காயத்திரி மக்கள் ஏற்பாட்டில் பொத்துவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வசதி பெற்றுக் கொடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது தமிழ்ப் பிரதேசங்கள் யுத்த காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பது மட்டுமல்லாது யுத்தம் நடந்திருந்தாலும் இன்னொரு வழியில் இந்தப் பிரதேசத்தில் இருக்கும் தமிழர்களை அடக்க வேண்டும் என்ற அடிப்படையில் பலர் செயற்பட்டிருக்கின்றார்கள். அந்த செயற்பாட்டின் காரணமாக இந்தப் பிரதேசத்தில் மிக மோசமான சூழலில் எமது தமிழ் சமூகம் அகப்பட்டுள்ளது.

IMG 20201010 110716
IMG 20201010 110716

இந்த நாட்டிலே வாழ்ந்த தமிழர்கள் தங்கள் இருப்புக்கள் தொடர்பான விடயத்தை ஜனநாயக ரீதியான முன்னெடுப்புகள் வெற்றி தராததன் காரணமாக ஆயுத ரீதியான போராட்டங்களின் மூலம் முன்னெடுத்ததன் காரணமாக சிங்களத் தலைவர்கள் எதிர்மறையான பார்வையைக் கூடுதலாக எங்கள் மீது செலுத்தியதன் விளைவாக இந்த நாட்டிலே மிகவும் மோசமாக நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். அந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தமிழர்கள் என்ற ரீதியில் இங்கு பல புறக்கணிப்புகள் இடம்பெற்றிருக்கின்றது. நாங்கள் 2012ம் ஆண்டு மாகாணசபைக்குள் நுழையும் போது இதனை நேரடியாக அவதானித்திருந்தோம். அக்காலத்தில் குறிப்பாக எமது மக்களின் பல காணிகள் பலவாறாக அபகரிப்புச் செய்யக் கூடியதான தீர்மானங்கள் கூட எமது பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்டது. அதற்கு எதிராகப் பல குரல்கள் கொடுத்தவர்கள்.

IMG 20201010 110716 1
IMG 20201010 110716 1

இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர வேறு எந்த அரசியல்வாதியும் தலைநிமிர்ந்து, நெஞ்சை நிமிர்த்தி எமது சமூகம் சார்ந்த விடயங்களைப் பேச முடியாது. அதனை எமது சமூகம் முதலில் உணாந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவர்களின் அரசியல் எதிர்காலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வார்களே தவிர எங்களுடைய இனம் சார்ந்த, சமூகம் சார்ந்த விடயங்களைக் கையாள்வதற்கு முன்வரமாட்டார்கள் என்ற விடயத்தை நான் உங்களுக்குச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

நாங்கள் பல்வேறு விடயங்களை எமது பிரதேசங்களுக்குச் செய்திருக்கின்றோம் அவற்றை படம் போட்டுக் காட்டவில்லை. ஏனெனில் எமது நாட்டில் மிகவும் மோசமான சூழல் இருந்தது. எமது சமூகமும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அந்த நிலையிலும் எமது சமூகத்திற்காக எங்களால் முடிந்த செயற்பாடுகளைச் செய்திருக்கின்றோம். எதிர்காலத்திலும் இன்னும் பல உதவிகளை முன்னெடுக்க இருக்கின்றோம்.

இந்த நாட்டில் யுத்தம் முடிந்த கையோடு எமது மக்களைக் கையாளுகின்ற விடயங்களை எமது மக்கள் சிந்திக்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகலெல்லாம் இந்த நாட்டிலே நடைபெறுகின்ற போது அதற்கு எதிராக எங்களுடைய மக்களின் இருப்பைப் பாதுகாக்கக்கூடிய ஒரே ஒரு சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான். நாங்கள் தொடர்ச்சியாக எமது மக்கள் சார்ந்த, அவர்களின் அடிப்படை விடயங்கள் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

எமது மாவட்டத்திற்குரிய ஒரே ஒரு தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநித்துவம். நாங்கள் ஒரு சவால் நிறைந்த காலகட்டத்தினை எதிர்நோக்கியிருக்கின்றோம். எங்களுடைய தமிழர்களின் நிலையான இருப்பைக் கேள்விக் குறியாக்குகின்ற அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. தலையைத் தடாவி கழுத்தை அறுக்கின்ற செயற்பாடுகளே எமது சமூகத்திற்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எம்மை ஆதரிப்பதாக, அரவணைப்பதாகக் கூறி எம்மை இல்லாமல் செய்கின்ற ஒரு நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதிலே நாங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமிழர்களின் போராட்டம் கடந்த காலங்களிலே வெற்றி தரவில்லை என்று எவருமே கூற முடியாது. நாங்கள் ஒரு தடவையல்ல பல தடவைகள் வெற்றியடைந்துள்ளோம் எமது தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட காலம் தொடக்கம் இற்றைவரைக்கும் நாங்கள் அழிவுகளைச் சந்தித்திருந்தாலும் படிப்படியான வெற்றி வளர்ச்சிகளைக் கண்டிருக்கின்றோம் என்பதைத் தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் போராட்ட இடைவெளிகளைப் பயன்படுத்தி சிலர் மாகாண ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் எம்மை அடக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார்கள்.

தற்போதைய அரசில் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற பதம் பேசப்படுகின்றது. இருந்தும் எமது மக்கள் இன்னும் புறக்கணிக்கப்படுகின்றார்கள். இதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க முடியாது. இந்த மாவட்டத்தில் எமது சமூகத்திற்கு எவ்வித புறக்கணிப்புகளும் இருக்கக் கூடாது. அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம். இது எதிர்காலத்தில் இன ரீதியான முறுகல்களை உருவாக்கும்.

நடந்து முடிந்த இந்தப் பாராளுமன்றத் தேர்தலிலே பல தமிழர்கள் தவறுகளை விளைவித்தவர்களாக எதிர்காலத்தில் இந்த மாவட்டத்திலே தலைதூக்கி வாழமுடியாத வகையிலான ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்தார்கள். அந்த நிலையை உணர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம் மாவட்டத்திற்கு ஒரு பிரதிநிதித்துவத்தை வழங்கியிருக்கின்றது. எனவே நாங்கள் எமது சமூகம், எமது கட்சி, எமது இனம் என்ற ரீதியில் செயற்பட வேண்டும்.

எமது மக்களின் இடங்களுக்குச் சென்று அவர்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்தவர்களாகவே நாங்கள் இருந்திருக்கின்றோம். எதிர்காலத்திலும் நிலையான தீர்வைப் பெறுகின்றவர்களாக இருந்து செயற்படுவோம். குறிப்பிட்ட காலத்திற்குள் எமது மாவட்ட ரீதியான பல விடயங்களுக்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.