தமிழ்த் தேசியக் கட்சிகள் அடுத்த கட்டம் பற்றி ஆராய மீண்டும் நாளை கூடுகின்றன!

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று நடைபெறவிருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நாளை (17 சனிக்கிழமை ) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான அழைப்பை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனாதிராஜா விடுத்துள்ளார்.

“தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 20வது திருத்தச் சட்டம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பவற்றுடன்; எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கான வேலைத் திட்டங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் ஆராயப்படும்” என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தாம் சந்தித்துப் பேசியிருப்பதாகவும், உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தால் என்பவற்றை இணைந்து நடத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்த அவர், இந்த நிலையில் அடுத்த கட்டச் செயற்பாடுகளையிட்டு தாம் ஆராயவேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக 20வது திருத்தச் சட்டம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பன குறித்து மற்றைய கட்சிகளின் கருத்துக்களையும் அறியவேண்டியுள்ளதென தெரிவித்திருந்தார்.

அதனைவிட தமிழ் மக்களுடைய உரித்துக்கள், அதற்கான செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து சில முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதாகவும், ஒன்றாக இணைந்து செயற்படக் கூடிய இந்த சந்தர்ப்பத்தில் அடுத்த கட்டமாக தாம் என்ன செய்ய வேண்டும் என்பதையிட்டு நாளைய சந்திப்பில் முக்கியமாக ஆராயவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.