இந்தியா கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

625.500.560.350.160.300.053.800.900.160.90 26
625.500.560.350.160.300.053.800.900.160.90 26

இந்தியா வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் அது வரவேற்கத்தக்கது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணை பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் .

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய இரு கட்சித் தலைவர்களும் சந்தித்துக் கருத்துக்களைப் பரிமாறுவது ஆரோக்கியமான செயற்பாடாகும். இந்தச் சந்திப்பு எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு நன்மையாக இருந்தால் வரவேற்கக்கூடிய விடயமாகும்.

ஈழ விடுதலைப் போராட்டக் காலத்தில் இருந்தே இந்தியா தொடர்ச்சியாக தமிழர் தரப்போடு பேசிக்கொண்டு வருகின்றது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசப்போவதாக அறிந்தேன். இந்தச் சந்திப்புக்கள் இணைய வழியூடான பேச்சுக்களாக அமையும் எனக் கூறப்படுகிறது.

இந்தியா வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் அது வரவேற்கக்கூடிய விடயமாகும். அந்தச் சந்திப்பு எவ்வாறு நடைபெறப் போகின்றது என்பது பற்றி பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தியாவுடன் எமது உறவுகளைப் பலப்படுத்த, எமது பிரச்சினைகள் பற்றிப் பேச சகல கட்சிகளையும் இணைத்து குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தேன். இவ்வாறு ஒரு குழு நியமிக்கப்பட்டால் தமிழர் தரப்பு பிரச்சினைகளை ஒரே குரலில் பேச முடியும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .