இனப்பிரச்சினைக்கான தீர்வை சர்வதேச நாடுகளுடன் இணைந்து பெறவேண்டும் – எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கட்சிகள் சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் ஒன்றிணைந்து இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

20 ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை சந்தர்ப்பவாத அரசியலை திட்டவட்டமாக தெரிவிப்பதாக அமைந்துள்ளது.

எந்தவிதமான கோரிக்கைகளும் நிபந்தனைகளும் இல்லாமல் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 8 பேர் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்காமல் விட்டிருந்தால் மூன்றில் இரண்டு பெரும் பான்மையை எட்டியிருக்கமுடியாது.

இந்தச் சூழ்நிலை நாடு அழிவுப்பாதையை நோக்கிச் செல்லவுள்ளமையை எடுத்துக்காட்டுகின்றது. இவர்கள் கொண்டுவரவுள்ள புதிய அரசியல் சீர்திருத்தம் என்பது ஒற்றையாட்சி சிங்கள பெளத்த ஆட்சியை பலப்படுத்துவதாகவே அமையும்.

தமிழ் தேசம் ஒரு முடிவு ஒன்றை எடுக்கவேண்டும்.

இலங்கைக்குள்ளே எத்தகைய முயற்சிகள் எடுப்பதை விடுத்து சர்வதேசத்தின் உதவியுடன் நடைபெற்று முடிந்த இனப்படுகொலை போர்க்குற்றங்களுக்கு நீதியைப்பெற்றுக் கொள்வதற்கும் ஒரு அரசியல் தீர்வை சர்வதேசத்தின் உதவியுடன் பெற்றுக்கொள்வதற்குமான முயற்சிகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றது. .

கோத்தாபய அரசு இரட்டைப் பிரஜாவுரிமை என்ற விடையத்தை எதிர்ப்பதாக ஆளும் கட்சியுடன் இருந்தவர்கள் சலசலப்பைக் காட்டியுள்ளபோதும்; இறுதி நேரத்தில் சரணாகதி அடைந்ததன் மூலம் சிங்கள பெளத்த ஆட்சியினுடைய உக்கிரமான நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதிகாரம் மேலோங்கப்போகிறது என்பது தான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.