பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் தமிழ் தேசிய அரசியலை நசுக்க முனைகின்றனர் – த.கலையரசன்

பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் தமிழ் தேசிய அரசியலை நசுக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சங்கமன்கண்டி கிராமத்தில் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

பெரும்பான்மை அரசியல் தலைவர்களின் அடக்குமுறையை எதிர்த்து அரசியல் செய்யவேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் இளைஞர் அமைப்புகளும் ,பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கடந்த காலத்தில் தமிழ் கிராமங்கள் அபிவிருத்தியில் பின்னோக்கி கவனிப்பாரற்ற அரசியல் ரீதியான அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ள சூழலில் தற்காலத்தில் எமது மக்களுக்கு பல அபிவிருத்தியை மேற்கொள்ள பல தடைகள் எழுகின்றது.

பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அரசியல் ரீதியான அழுத்தங்கள், நாட்டில் அநியாயம் மேலோங்கி நிற்கிறது. இவை நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.