அமெரிக்காவின் பிடியிலிருந்து தப்பவே முடியாது கோட்டா அரசு-சம்பந்தன்

sambandhan 1561952052 1
sambandhan 1561952052 1

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளைப் பொறுத்தவரைக்கும் அதை உறுதி செய்வதற்காக ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதைத்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியா நேரடியாகவும் மறை முகமாகவும் எடுத்துரைத்து விட்டுச் சென்றுள்ளார். எனவே, ஐ.நா. தீர்மானத்தை முன்வைத்த அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையை கோட்டாபய அரசு நிராகரிக்க முடியாது. அதை நிறைவேற்றும் கடமையிலிருந்து இந்த அரசு விலகவும் முடியாது.”

என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரைச் சந்தித்த பின்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களுடன் பேசினார். இதன்போது பொறுப்புக்கூறல் கடமையிலிருந்து இலங்கை ஒருபோதும் விலக முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை இலங்கை உறுதி செய்யக் கோரும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டு சர்வதேச நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்திலுள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான வகையில் இலங்கை அரசு செயற்பட வேண்டும்.

இதைத்தான் இலங்கை வந்து சென்றுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசிடம் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.

ஆனபடியால் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளைப் பொறுத்த வரைக்கும் அதை உறுதி செய்வதற்காக ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைக்களை எடுக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்