20 ஆவது திருத்தத்தை ஜனாதிபதி தமிழ் மக்களின் சாபமாக்கினால் நாட்டிற்கே பேராபத்து: எச்சரித்தார் ஐங்கரநேசன்!

unnamed 6 1
unnamed 6 1

20 ஆவது திருத்தத்தை ஜனாதிபதி தமிழ் மக்களின் சாபமாக்கினால் கடைசியில் அது நாட்டுக்கே சாபமாகி விடும்” என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அந்த அறிக்கையின் முழுவடிவம் வருமாறு

பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளே இஸ்லாமியப் பயங்கரவாதத்தைக் கடந்த அரசாங்கத்தால் ஒடுக்க முடியாமல் போனது என்றும், நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதியாகத் தான் இருந்தமையாலேயே விடுதலைப் புலிகளை அழிக்க முடிந்தது என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால், இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஒடுக்க முடியாமற் போனதற்கும், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடிந்தமைக்கும் அரசியலமைப்புக் காரணம் அல்ல.

இஸ்லாமியத் தீவிரவாதம் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டமைக்குப் பாதுகாப்புத் தரப்பில் இருந்த குறைபாடுகளும், விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் மாறிய சர்வதேச அரசியல் நிலவரங்களுமே காரணங்களாகும். இக்காரணங்களைத் தவிர்த்து பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரங்களை வேண்டி நிற்பது அரசாங்கத்தால் பயங்கரவாத கண்கொண்டு நோக்கப்படும் சிறுபான்மையின மக்கள் மனதில் சந்தேகங்களையே விதைத்திருக்கிறது.

ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் மிக்கவராக மாறியவுடனேயே அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ மேற்கொண்ட இலங்கை விஜயமும், இதன்போது அவர் சீனாவை இலங்கையைச் சூறையாடும் ஒரு வேட்டைக்காரனாக உருவகித்து ஆற்றிய உரையும், தொடர்ந்து அவசரம் அவசரமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்கும் இடையில் நிகழ்ந்த சந்திப்பும் இலங்கை இந் நாடுகளுக்கிடையேயான இந்தோ பசுபிக் போட்டியின் மோதுகளமாகியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்தபோது அவர் எடுத்திருந்த அமெரிக்க சார்பு நிலைப்பாடு ஈழத்தமிழர் பிரச்சினையைக் காரணங்காட்டி இந்தியா இலங்கையில் தலையிடக் காரணமாக அமைந்தது. இந்தியாவுக்கு எதிராக ராஜபக்ச சகோதரர்கள் எடுத்த சீனச் சார்பு இப்போது அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கைக்கு இராஜ தந்திர நெருக்குதல்களைக் கொடுக்கக் காரணமாக அமைந்துள்ளது.

ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டுடன் கொண்டிருக்கும் உறவு காரணமாக இலங்கை ஒருபோதும் இந்தியாவை நேசநாடாகக் கருதியதில்லை. இனிமேலும் கருதப் போவதுமில்லை. இதனாலேயே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் இலங்கையில் சீனாவை அதிகம் காலூன்ற அனுமதித்திருக்கிறது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக யுத்தம் இப்போது பனிப்போராக மாறியிருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளினதும் குவாட் அணி வெளிப்படையாகவே சீனாவை எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், சீனச்சார்பு நிலை எடுத்திருக்கும் இலங்கையின் நடு நிலையற்ற வெளி உறவுக்கொள்கை காரணமாக இந்நாடுகளின் அழுத்தங்களுக்கு இலங்கை அடிபணிய வேண்டிய இக்கட்டுக்கு ஆளாகியுள்ளது.

வல்லரசுகளின் போட்டிக்களமாக இலங்கை சிக்கியுள்ளமைக்கு தீர்க்கப்படாது நீண்டு செல்லும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினையே அடிப்படைக் காரணமாகும்.

நிறைவேற்று அதிகாரப் பலத்தாலேயே விடுதலைப் புலிகளைத் தங்களால் தோற்கடிக்க முடிந்தது என்று கூறிய ராஜபக்ச குடும்பமே இன்று ஆட்சியில் இருப்பதால், அதே நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வினையும் புதிய அரசியல் யாப்புக்கு ஊடாகப் பெற்றுத்தர முடியும்.

தவறினால் இலங்கையின் இறைமையையே பாதிக்கக்கூடிய அளவிற்கு தமிழ் மக்களை ஒரு துருப்புச் சீட்டாக வைத்து வல்லரசு நாடுகள் ஆடும் இந்தப் பூகோள அரசியல் போட்டியில் இலங்கை பலிக்கடாவாவது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.