வரவு- செலவு திட்ட விவாதம் : 19 நாட்கள் நடத்த தீர்மானம்

download 23
download 23

2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்படவுள்ள நிலையில் வரவு செலவு திட்டம் விவாதத்தை 19 நாட்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.

வரவு செலவு திட்ட விவாதத்தை 10 நாட்கள் மாத்திரம் நடத்துவதாக அரசாங்கம் கூறியிருந்த நிலையில் கடந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எதிர்கட்சியினர் அதனை எதிர்த்திருந்தனர். இந்நிலையில் அடுத்த கூட்டத்தில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டமைக்கு அமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்று முற்பகல் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில், மீண்டும் வரவு செலவு திட்ட விவாதம் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வரவு செலவு திட்ட விவாதத்தை 25 நாட்களும் நடத்தியாக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கூறியிருந்த நிலையில் இறுதியாக 19 நாட்கள் விவாதம் நடத்த ஆளும் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளனர்.  இதற்கமைய  17 ஆம் திகதி வரவு -செலவு திட்டத்தை சமர்பித்த பின்னர், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வரவு -செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் முன்னெடுக்கப்படவிருப்பதுடன், நவம்பர் 21ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறும்.

அதன் பின்னர் நவம்பர் 23ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நிறைவுபெறும். அன்றையதினம் பிற்பகல் 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் புதன் கிழமை கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது சபை அமர்வுகள் தினமும் 9.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 5.30 மணிவரை நடத்தப்படும். நவம்பர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.30 மணிவரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்துக்காக ஒதுக்கப்படவிருப்பதுடன் நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதிவரையான காலப் பகுதியில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்துக்காக முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.00 மணிவரையும் நேரம் ஒதுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நேற்றைய கூட்டத்தில்  சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆளும் கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பெர்னாந்து, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர்களான நிமல்சிறிபால.டி.சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டளஸ் அழகப்பெரும, பிரசன்ன ரணதுங்க, வாசுதேவ நாணயக்கார, அலி சப்ரி ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, ரஞ்சித் மத்தும பண்டார, கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், டிலான் பெரேரா, அனுர திஸாநாயக்க மற்றும் மனோ கணேசன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். அத்துடன் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க மற்றும் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவல ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.