2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பு

1523550946 Sri Lanka Parliament prorogued
1523550946 Sri Lanka Parliament prorogued

2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கை நாளை பிற்பகல் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவால் நாளை பிற்பகல் 1.40 அளவில் பாதீடு நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடா்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 4 நாட்கள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.

குறித்த நாட்களில் பாதீட்டின் மீதான விவாதம் இடம்பெறவுள்ளதுடன் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 5 மணிக்கும் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் பாதீட்டின் குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன் பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்தமுறை பாதீட்டு விவாத நாட்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்றத்திற்கு ஊடகவியலாளர்களின் பிரவேசமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.