2021 ஆம் நிதி ஆண்டிற்கான 75 ஆவது வரவு – செலவுத்திட்டத்தின் முழுமையான விபரம்

1 8
1 8

2021 ஆம் நிதி ஆண்டிற்கான 75 ஆவது வரவு – செலவு திட்ட உரையை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு சமர்பிப்பித்து உரையாற்றினார்

பன்னாட்டு இராஜதந்திரிகள் மற்றும் நிதி அமைச்சின் முக்கிய அதிகாரிகளுக்கு உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

2021 ஆம் ஆண்டிற்கான அரச செலவீனங்களுக்கு 2678 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்தல் மற்றும் 2900 பில்லியன் ரூபா கடன் பெறல் ஆகிய இரு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் சமர்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் விசேட செலவீனங்களுக்கான ஒதுக்கீடாக 1960 கோடியே 33 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சிற்கு 694 கோடியே 60 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பெளத்த சமய கலாசார அலுவல்கள் தொடர்பான அமைச்சிற்கு 360 கோடியே 60 இலட்சம் ரூபா, முஸ்லிம் சமய பண்பாடு அலுவல்கள் திணைக்களத்திற்கு 19 கோடியே 60 இலட்சம் ரூபா, கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்திற்கு 27 கோடியே 90 இலட்சம் ரூபா, இந்து சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு 31 கோடியே  80 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் நிதி அமைச்சிற்கு 15760 கோடியே 37 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி மூலதன சந்தை, மற்றும் அரச தொழில் முயற்சிகள், மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சிற்கு 3299 கோடியே 31 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் பாதுகாப்பு அமைச்சிற்கு 35515 கோடியே 92 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு 2520 கோடியே 45 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 06 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட பின்னர், ஒக்டோபர் 20 ஆம் திகதி பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி கோத்தாபயவின் அரசாங்கத்தினது “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைச் சட்டகத்திற்குள் 2021 – 2023 நடுத்தர கால பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பினைத் துரிதப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தினை பலப்படுத்துகின்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையினை இந்த உயர் சபைக்கு சமர்ப்பிப்பதனையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் எனத் தெரிவித்து 75 ஆவது வரவு செலவுத்திட்ட முன்மொழிவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் முன்வைத்தார்.

நாளை 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை முன்வைக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.

இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21 ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு நடத்தப்படும். அதன்படி நாளை முதல் 20ஆம் திகதி வரை பாராளுமன்றம் முற்பகல் 9.30 மணி முதல் 5.30 மணிவரை நடத்தப்படும்.

இதன் பின்னர் வரவுசெலவுதிட்ட குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை நடத்தப்படும். டிசம்பர் 10 ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்