நான் அச்சுறுத்தல்களுக்கு பயந்த நபர் அல்ல- ஜனாதிபதி

Kotta
Kotta

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பதவியேற்று ஒரு வருடம் பூர்தியாகியுள்ள நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை நிகழ்த்தினார்.

எனது வெற்றி அல்லது தோல்வியை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோல் மக்கள் கருத்தேயன்றி சமூக ஊடகங்கள் மூலம் அரசியல் எதிரிகளால் பரப்பப்படும் தவறான பிரச்சாரங்கள் அல்ல என ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்திருந்தார்.

இதன் போது உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,

இந்த குறுகிய காலத்தில் மக்கள் கோரியபடி நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மக்கள் இது பற்றி இனியும் அச்சப்படவோ சந்தேகப்படவோ தேவையில்லை. என தெரிவித்தார்.

கடந்த ஒருவருட காலத்தில்,

நாட்டின் ஏழ்மையான குடும்பங்களை இலக்காகக் கொண்டு 100,000 வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம்.

வேலையற்றிருந்த 60,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் மேலும் அவர்கள் நாட்டிற்கு உற்பத்தித் திறன்வாய்ந்த சேவையைச் செய்யத் தேவையான பயிற்சியையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

கிராமப்புற மக்களிடையே வறுமையை ஒழிப்பதற்கான மற்றொரு நடவடிக்கையாக, காணிகளை இழந்த 20,000 குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடிநீரை வழங்குவதற்கான எங்கள் திட்டத்தின் கீழ் 429,000 குடும்பங்களுக்கு நாடு முழுவதும் நீர் வழங்குவதற்கான ஆரம்ப பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

ஒரு லட்சம் கி.மீ வீதிகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் மூன்று 10,000 கி.மீ திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

10,000 பாலம் கட்டுமான திட்டத்தின் கீழ் சுமார் 5,000 பாலங்களின் பணிகள் நிறைவடைந்து வருகின்றன.

இந்த ஆண்டு மட்டும், நகர்ப்புற குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் 20,000 க்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு திட்டத்தின் கீழ் 14,000 கிராமப்புற வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 4000 தோட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மேம்படுத்தப்படும். பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 10,000 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அத்துடன் தங்கள் பொறுப்புகளை புறக்கணிக்காமல் மக்களின் நியாயமான தேவைகளை விரைவாக நிறைவேற்றுமாறு அனைத்து அரச ஊழியர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இது சரியாக நடக்கிறதா என்று கண்டறிய நான் அவ்வப்போது அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் செல்கிறேன். இதை தொடர்ந்து செய்ய நான் எதிர்பார்த்துள்ளேன் என தெரிவித்த ஜனாதிபதி,

நாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், சேவைகளை வினைத்திறனானதாக ஆக்கவும், ஊழலை ஒழிக்கவும், விரயங்களை குறைக்கவும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மட்டுமன்றி மக்களும் பங்களிக்க வேண்டும். எனவும் கேட்டு கொண்டார்.

உரையை நிறைவு செய்யும்போது, நான் எப்போதும் சவால்களுக்கு முகம்கொடுத்து வெற்றிபெற்றவன். நான் அச்சுறுத்தல்களுக்கு பயந்த நபர் அல்ல. பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து அவற்றை தீர்ப்பதன்றி அவற்றிலிருந்து விடுபட்டு ஓடும் பழக்கம் என்னிடம் இல்லை.

வாக்குகளை மட்டும் எதிர்பார்த்து யாரையும் மகிழ்விக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. இந்த நாட்டின் சுபீட்சமே எனது எதிர்பார்ப்பு. அந்த நோக்கத்தை அடைய மனசாட்சியுடன் தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்க நான் தயங்க மாட்டேன் எனதெரிவித்துள்ளார்.