இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது! – ஒபாமா

vikatan 2020 06 38200ebd 98c9 4f76 8500 3b04c329ecfb z1 1
vikatan 2020 06 38200ebd 98c9 4f76 8500 3b04c329ecfb z1 1

லங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.”

“உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் பராக் ஒபாமா.

“1945 இல் ஐ. நா. சாசனத்தை வாசித்தேன். அதன் நோக்கங்கள் எனது தாயின் இலட்சியங்களோடு பொருந்திப்போவதைக் கண்டு வியந்தேன்.ஆனால் ஐ. நா. எப்போதும் அந்த உயரிய நோக்கங்களுடன் செயற்படவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை…” – என்று ஒபாமா எழுதியுள்ளார்.

“பனிப்போரின் இடை நடுவில் பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளிடையிலான பிளவுகளால் ஒருமித்த கருத்தை அடைவதற்கான வாய்ப்புகள் அரிதாக இருந்தன. அதனால் சோவியத் ஒன்றியத்தின் டாங்கிகள் ஹங்கேரிக்குள் நகர்ந்தன. ஐ. நா. கைகட்டி பார்த்து நின்றது. அமெரிக்க விமானங்கள் வியட்நாம் கிராமங்களில் நேபாம் குண்டுகளைப் போட்டன.”

“பனிப்போருக்குப் பின்னரும் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் நீடித்த பிளவுகள் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஐ. நாவின் திறனை கொண்டு நடத்தின.

“சோமாலியா போன்ற தோல்வி கண்ட அரசுகளை மீளக்கட்டியமைப்பதற்கோ அல்லது இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான படுகொலைகளைத் தடுப்பதற்கோ ஐ. நாவின் உறுப்பு நாடுகளிடையே வழி முறைகளோ அன்றி கூட்டு விருப்பமோ இருக்கவில்லை” – என்று முன்னாள் அதிபர் ஒபாமா தனது நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கை “இனப்படுகொலை” என்பதை ஒபாமா “ethnic slaughter” என்ற ஆங்கில வார்த்தையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்

உலக நெருக்கடிகளின் போது ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள், தீர்மானங்களை விமர்சிக்கும் அத்தியாயங்களில் இலங்கைத் தமிழர் படுகொலைகளை ஒபாமா சுட்டிக்காட்டியிருப்பது உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

தனது பதவிக்காலத்தின் முதல் ஐந்து ஆண்டுகால அனுபவங்களை விவரிக்கும் அவரது நூலின் 768 பக்கங்கள் கொண்ட முதற்பாகம் ஆங்கிலத்திலும் வேறு 24 மொழிகளிலும் அச்சிடப்பட்டு கடந்த செவ்வாயன்று வெளியாகியது.

சமகால உலகத் தலைவர்கள் பற்றிய தனது எண்ணங்கள், தனது பதவிக்காலத்தில் பூகோள அரசியல் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள், சொந்த வாழ்க்கைப் பின்னணி எனப் பல தகவல்களை பதிவு உள்ளடக்கிய அந்த நூலில், தென்னாசிய அரசியல் மையமான இலங்கை குறித்தும் அதன் இறுதிப் போர் பற்றியும் ஒபாமா என்ன கூறப்போகிறார் என்று நூல் வெளியாகுவதற்கு முன்பிருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இலங்கையில் தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் கொன்றொழிக்கப்பட்ட இறுதி யுத்த காலப்பகுதியில் அமெரிக்க அதிபராகப் பதவியில் இருந்த ஒபாமா, வன்னியில் பாதுகாப்பு வலயங்களுக்குள் கனரக பீரங்கிகள் மற்றும் ஷெல் தாக்குதல்களை தவிர்க்குமாறு அப்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டிருந்தார்.

இறுதிப்போரை நிறுத்துவதற்கு ஒபாமா தலையிடுவார் என்ற தீவிர எதிர்பார்ப்பு ஈழத் தமிழ் மக்களிடம் மட்டுமன்றி பிராந்திய நாடுகள் மத்தியிலும் காணப்பட்டது.

தற்சமயம் தனது நூலில் இலங்கை இனப் படுகொலையை ஐ. நாவின் தோல்வி என்று ஒபாமா மதிப்பிட்டிருப்பது, ஈழத் தமிழர் படுகொலை விவகாரத்தை மீளவும் சர்வதேச மையப்படுத்தி இருப்பதுடன் இலங்கைப் போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறது என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.