தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாறு கோரி நீதி அமைச்சரிடம் மகஜர் ஒன்று கையளிப்பு!

129367968 1854261598064760 5271568070935289869 o
129367968 1854261598064760 5271568070935289869 o

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் மகஜர் ஒன்று இன்று சனிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சந்திப்பின் போது நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் ச. வியாழேந்திரன், குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மருதுபாண்டி இராமேஷ்வரன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர் நீதி அமைச்சரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தால் சட்ட மா அதிபர் உள்ளிட்ட தரப்பினரையும் அழைத்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட முடியும் என, இதன்போது நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கைதிகளின் விடுதலை மாத்திரமின்றி சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து ஜனாதிபதியிடம் எடுத்துச்செல்வதற்கு நீதி அமைச்சர் தலைமை தாங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த சந்திப்பின் போது முன்வைக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி புதிய அரசியலமைப்புத் தயாரிப்பு விடயத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்களின் நிலைப்பாடுகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் எழுத்து மூலமான யோசனைகளை முன்வைக்குமாறு நீதி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.