வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளரை கைதுசெய்வதற்கு காத்திருக்கும் காவல்துறை

VideoCapture 20201207 115942
VideoCapture 20201207 115942

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷை கைது செய்வதற்கான முயற்சியில் கோப்பாய் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகத் தவிசாளர் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

கோப்பாய் காவல்துறையினர் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளதாகவும் தவிசாளர் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொது சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் முயற்சி இடம்பெறுவதாகத் தெரிய வருகிறது. இந்தத் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் 14 நாட்கள் பிணை இல்லாமல் அவரைத் தடுத்துவைக்க முடியும் என்பதால் இந்த முயற்சி இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் வீட்டிலோ, அலுவலகத்திலோ இல்லாததால் தவிசாளர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்களால் அண்மையில் அடிக்கல் நாட்டி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதனைக் குறிக்கும் வகையில் நாட்டப்பட்ட அறிவிப்புப் பலகையை அண்மையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றினார்.

அது குறித்து அவரிடம் இரண்டு நாட்கள் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்தனர். பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க பிரதேச சபையின் அனுமதியின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டமை சட்டவிரோதம் என நிரோஷ் தெரிவித்துள்ளார்.

சபை ஒன்றிற்கு பகிரப்பட்ட அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவே தாம் குறித்த திட்ட பெயர்ப்பலகையினை அகற்றியதாகவும் உரிய முறைப்படியான அனுமதி பெறப்பட்டால் அல்லது உரியவாறு அணுகினால் குறித்த பெயர்ப்பலகையை கையளிக்கத்தயார் எனவும் வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.