தேசிய பாதுகாப்பு குறித்து பேசும் அரசால் சர்வதேச சதித்திட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை – ருவன் விஜேவர்தன

Ruwan Wijewardene
Ruwan Wijewardene

தேசிய பாதுகாப்பைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு தனது ஆட்சியில் சிறைச்சாலைக்குள் முன்னெடுக்கப்படும் சர்வதேச சதித்திட்டத்தை கட்டுப்படுத்த முடியாமலுள்ளது கேலிக்குரியதாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நேற்று நடைபெற்ற பொது மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

அரசாங்கம் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியை மீளக் கட்டியெழுப்பி மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைக்க வேண்டும் என்பது கட்சி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

இந்நிலையில் தற்போதுள்ள அமைச்சர்கள் சிலர் நாட்டுக்கு எதிராக மஹர சிறைச்சாலைக்குள் சர்வதேச சதிதிட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் கூறுகின்றனர். தேசிய பாதுகாப்பைப் பற்றி பேசும் இந்த அரசாங்கம் தமது ஆட்சியில் சிறைச்சாலைக்குள் முன்னெடுக்கப்படும் சர்வதேச சதித்திட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையிலுள்ளனர்.

இது மிகவும் கேலிக்குரியதாகும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை சுட்டுக் கொலை செய்கின்றனர். மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றதைப் போன்று வெலிக்கடை சிறைச்சாலையிலும் 20 இற்கும் மேற்பட்டோர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறான அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு நாம் தயாராக வேண்டும். எதிர்காலத்தில் நாடு முகங்கொடுக்கும் சவால்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே தீர்வு வழங்க முடியும். நாட்டில் காணப்படும் பொருளாதார பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மாத்திரமே தீர்வு உள்ளது.