ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு தயார்- திஸ்ஸ அத்தநாயக்க

அத்தநாயக்க
அத்தநாயக்க

தலைவர் உட்பட கட்சி நிர்வாகிகளை வருடா வருடம் தெரிவுசெய்யும் விதத்திலான ஜனநாயக வியூகத்தின் அடிப்படையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

எமது கட்சிக்கான யாப்பு இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தவாரம் நிறைவேற்றுக்குழு கூடி அதற்கான ஒப்புதலை வழங்கும். அதன்பின்னர் கட்சி யாப்பின் பிரகாரம் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

முதலாவதாக செயற்குழுவின் ஊடாக சகல பதவிகளுக்குமான நிர்வாகிகளை கட்சி தலைவர் தெரிவுசெய்வார். இதற்கு முகாமைத்துவக்குழு, நிறைவேற்றுக்குழுவின் அனுமதியும் பெறப்படும்.

இரண்டாவதாகக் கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். தேர்தல் தொகுதிகளில் முன்னெடுக்க வேண்டிய விடயங்கள், கீழ்மட்ட அரசியல் இயந்திரத்தை பலப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் திட்டங்கள் வகுக்கப்படும்.

அத்துடன் புத்திஜீவிகள் குழு, சட்டத்தரணிகள் குழு, தொழிற்சங்க பிரிவுகள் எனக் கிளை அமைப்புகள் கட்டியெழுப்படும். அதற்கான பூர்வாங்க பணிகள் இடம்பெற்றுள்ளன. நிறைவேற்றுக்குழுவின் அனுமதி கிடைத்தபின்னர் இறுதிப்படுத்தப்படும்.

2021ஆம் ஆண்டுக்காக அங்கத்தவர்களை இணைக்கும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது. அதேபோல் அடுத்தவாரம் முதல் ‘வெற்றிபெறுவோம்’ எனும் தொனிப்பொருளின்கீழான வேலைத்திட்டமும் 6 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும். 2021 ஜனவரி மாதத்துக்குள் இதற்கான பணிகளை நிறைவுசெய்வதற்கு எதிர்ப்பார்க்கின்றோம்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய யாப்பில் தலைவர் உட்பட நிர்வாக உறுப்பினர்களின் பதவி காலம் ஒரு வருடமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வருடா, வருடம் நிறைவேற்றுக்குழு ஊடாக தலைவர் பதவி உட்பட நிர்வாக பதவிகளுக்கு உறுப்பிர்கள் தெரிவுசெய்யப்பட்டு, வருடாந்த சம்மேளனத்தில் அதற்கு அனுமதி பெறவேண்டும்.

இவ்வாறு ஜனநாயக வியூகத்தின் அடிப்படையிலேயே யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நம்பிக்கையும் கட்டியெழுப்பட்டுள்ளது.

செயற்குழு இருந்தாலும் நிறைவேற்றுக்குழுவே பலம்பொருந்திய கட்டமைப்பாக கட்சியில் விளங்கும் என தெரிவித்துள்ளார்.