புதிய அரசமைப்பு, ஜெனிவா விவகாரம்: சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு கொழும்பில் இன்று முக்கிய சந்திப்பு!

sampanthan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

புதிய அரசமைப்புக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அதற்கான வேலைத்திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் களமிறங்கியுள்ளது.

அதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பிக்க வேண்டிய முன்மொழிவுகள் தொடர்பில் முடிவெடுக்கக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இன்று கொழும்பில் கூடுகின்றது.

காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இதன்போது புதிய அரசமைப்புக்கான முன்மொழிவுகள், சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் ஐ.நா. தீர்மான விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்படும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு கொழும்பு சென்றுள்ளனர்.