கொரோனா மரணம் தொடர்பில் அரசாங்கம் ஒரு இனம் சார்ந்து முடிவெடுக்க கூடாது- இன்பராசா

Capture 1
Capture 1

கொரோனா மரண விடயம் தொடர்பில் அரசாங்கம் ஒரு முடிவை எடுப்பதாக இருந்தால் தனித்தே ஒரு இனத்தைச் சார்ந்து எடுக்காமல் இந்த நாட்டில் வாழும் ஏனைய இன மக்களின் கருத்துக்களையும் கருத்திற் கொண்டே எடுக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் மரணித்தவர்களின் உடலங்களை எரிப்பதா? புதைப்பதா? என்பது தொடர்பில் நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கும் சர்ச்சை தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போது எமது நாட்டில் மட்டுமல்ல உலகம் பூராகவும் கொரோனா தொற்றுநோய் பரவி உலக மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் பல இலட்சக் கணக்கான உயிர்களும் காவுகொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையிலே தற்போது இலங்கையில் இவ்விடயம் ஒரு அரசியல் ரீதியாகவும், இன ரீதியாகவும் பார்க்கப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடலங்களை எரிப்பது இந்த நாட்டில் பெரும் சர்ச்சையை தற்போது ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் அதற்கு வெளியிலும் இஸ்லாமிய அரசியற் பிரமுகர்களும், மதத்தலைவர்களும் கொரோனா நோயால் இறப்பவர்கள் தகனம் செய்யாமல் அடக்கம் செய்வதற்கு பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்த அடிப்படையில் எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் தங்களின் சார்பு நிலைக் கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர். கருத்துக்களைத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால் இந்த விடயத்தில் எமது இனம் சார்ந்து நேரடியாக தங்கள் கருத்துக்ளை எவரும் முன்வைக்கவில்லையே என்பதே மனவேதனை தரும் விடயமாக இருக்கின்றது.

கொரோனா நோயினால் இறப்பவர்கள் தெடர்பில் அரசாங்கம் எடுக்கும் முடிவிற்குக் கட்டுப்பட வேண்டிய கடமை, கோட்பாடு இந்த நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் உண்டு. இதனை அரசாங்கம் ஒரு மதம், ஒரு இனம் சார்ந்து மேற்கொள்ளவில்லை. இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் இதே முடிவே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இவ்வாறான நிலைமையில் தற்போது அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவுகளை இந்த நாட்டில் வாழுகின்ற மூவின மக்களும் ஏற்றுக் கொண்டே வருகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் ஒரு மதம் சார்ந்து சிந்தித்து இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் உடல்களை அடக்கம் செய்யத் தரும்படி விடயங்களை முன்வைத்து வருகின்றனர். நீர் மட்டம் ஆழமாக உள்ள பகுதிகளை இதற்காக தெரிவு செய்து தருமாறு கோரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் இறக்காமம், மற்றும் வடக்கு மாகாணத்தில் மன்னார் மரிச்சுக்கட்டி என்ற பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இது தொடர்பில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் வேண்டுகோள் என்னவென்றால் இந்த நாட்டில் நீதி, நியாயம் சரிசமமாக இருக்க வேண்டும். இதில் ஒரு சாராருக்கு சார்பானதாக இருக்கக்கூடாது. இதனை இன, மத ரீதியில் அணுகவேண்டாம். அவ்வாறே பொரும்பான்மை பௌத்த மக்களும் முற்று முழுதாக தகன செயற்பாடுகளை மேற்கொள்வதில்லை. அந்த அடிப்படையில் இந்த அரசாங்கம் ஒரு முடிவை எடுப்பதாக இருந்தால் தனித்தே ஒரு இனத்தைச் சார்ந்து எடுக்காமல் இந்த நாட்டில் வாழும் ஏனைய இன மக்களின் கருத்துக்களையும் கருத்திற் கொண்டே தீர்மானம் எடுக்க வேண்டும் என இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.