தமிழ் விவசாயிகள் மோசமாக பந்தாடப்படுகின்றார்கள் – கயேந்திரன்

Gajendiran 720x380 1
Gajendiran 720x380 1

இந்த அரசானது சிங்கள மக்களின் பொருளாதாரத்தை வளர்க்கும் செயற்பாட்டினை முன்னெடுப்பதுடன் தமிழ் விவசாயிகள் மோசமாக பந்தாடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செ.கயேந்திரன் தெரிவித்தார்.

ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பொதுமக்களிற்கு சொந்தமான காணிகள் வனவள திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. திடீர் என வருகைதந்த அவர்கள் மக்களிற்கு எந்தவிதமான முன்னறிவித்தலையும் வழங்காமல் மக்களின் காணிகளில் மரங்களை நாட்டியுள்ளனர்.

அந்த  பகுதிகளுக்குள் மக்கள் செல்லகூடாது. மாடுகளையும் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று அச்சுறுத்தியுள்ளனர். இந்த செயற்பாடானது மக்களின் உரிமைகளை மீறும் செயற்பாடாகவே உள்ளது.

இதனுடன் தொடர்புடைய அமைச்சர் எமக்கு உறுதி மொழிகளை தந்தபோதும் இன்று வரை இந்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவில்லை. ஒருபுறத்தில் விவசாயிகளை பாதுகாக்க போகின்றோம் என்று ஜனாதிபதி பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. அவை சிங்கள பெரும்பான்மை மக்களுடைய பொருளாதாரத்தை பெருப்பிப்பதற்கான நோக்கத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றதே தவிர தமிழ் விவசாயிகள் மோசமாக அழிக்கப்படும் நிலை தான் காணப்படுகின்றது. 

எங்களுடைய விசாயிகள் பந்தாடப்படுகின்றார்கள். நிலங்கள் பறிக்கப்படுகின்றது. அனைத்து திணைக்களங்களும் தமிழர்களது நிலங்களை கபளீகரம் செய்து தமிழ் மக்களது விவசாய பொருளாதாரத்தை அழிக்கின்ற செயற்பாட்டையே மேற்கொண்டு வருகிறது. இந்தசெயற்பாடு தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது. அந்த காணிகளை மக்களிடம் பெற்றுக்கொடுக்கும் வரைக்கும் நாம் அவர்களுடன் நிற்போம் என தெரிவித்துள்ளார்.