அரசியல் தீர்வு கிடைக்க இந்தியா துணை நிற்கும் – சம்பந்தன் முழு நம்பிக்கை

R.Sampanthan 1
R.Sampanthan 1

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் நடவடிக்கையில் இந்தியாவை நாம் முழுமையாக நம்புகின்றோம். தமிழர்களுக்கான தீர்வு விடயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்களும், இன்று எம்முடன் அவர் பேசிய விடயங்களும் ஒன்றாகவே உள்ளன. இதனை நாம் வரவேற்கின்றோம். இந்தக் கருத்துக்கள் எமக்கு  நம்பிக்கை மிகுந்தவையாக உள்ளன.என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.  

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

பிறந்துள்ள புதுவருடத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த சந்திப்பாக இது இருந்தது. இது எமக்கு மிகவும் நம்பிக்கை மிகுந்த – திருப்திமிக்க சந்திப்பாகவும் உள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை விவகாரங்களில் பல வருடங்கள் அனுபவம் வாய்ந்தவர். இங்குள்ள நிலைமைகளை ஆழமாக அறிந்தவர்.

மாகாண சபை முறைமைகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் புதிய அரசமைப்பு வரைபு மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடினோம்.

அவர் எமக்கு அளித்த பதில்கள் நம்பிக்கை மிகுந்தவையாக உள்ளன. புதிய அரசமைப்பு மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் நாம் கொண்டுள்ள நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் நேரில் எடுத்துரைப்பார். இது தொடர்பில் அவர் எமக்கு வாக்குறுதியும் தந்துள்ளார்.

தீர்வு விடயம் மற்றும் தமிழர் விவகாரம் தொடர்பில் இந்தியாவுடனான எமது பேச்சுகள் தொடரும் என குறிப்பிட்டார்.