ஒடுக்குமுறைகளை ஏற்கோம் என்று அரசின் காதுகளுக்கு முரசறைவோம்: நாளைய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பு- சரவணபவன்

.சரவணபவன்
.சரவணபவன்

யாழ். பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி என்ற வகையில் வடக்கு – கிழக்கு தழுவிய நாளைய ஹர்த்தாலில் அனைவரும் இணைந்து தமிழ் மக்கள் என்றுமே ஒடுக்குமுறைகளைத் தலைகுனிந்து ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற செய்தியை ஆட்சியாளர்களுக்கு உறைக்கும் வகையில் உணர்த்துவோம்.என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

கொதிநிலை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த, முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவுத் தூபி இரவோடிரவாக உடைக்கப்பட்ட சம்பவம் தமிழ் மக்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியுள்ளது. ஒவ்வொரு தமிழரின் குருதியையும் ஆற்ற முடியாத கொதிநிலைக்கு உட்படுத்தியுள்ளது.

அந்த நினைவுத்தூபி இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களதும் மாணவர்களின் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவாலயமாகும். எனவேதான் இது பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு மாணவர்களால் அஞ்சலி செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நினைவாலயம் தகர்க்கப்பட்டதன் மூலம் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செய்யும் மாணவர்களின் உரிமை சவாலுக்குக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பண்பாட்டுப் போர்

இது தமிழ் மக்களின் நினைவாலயத்தைத் தகர்த்த மனிதாபிமானமற்ற, மனித உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் ஒரு கொடுமை என்ற மட்டத்துக்குள் அடக்கிவிட முடியாது. அதற்கும் அப்பால் சங்ககாலம் தொட்டு வழக்கிலிருந்து வரும் நடுகல் வழிபாடு என்ற பண்பாட்டு விழுமியத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு யுத்தமாகவும் பார்க்கப்பட வேண்டியுள்ளது.

இந்த நாட்டில் ஜனாதிபதியாலும் பிரதமராலும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோஷம் மீண்டும் மீண்டும் உரக்க எழுப்பப்படுகின்றது. ஆனால், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஒரு பெரும் புரட்சியை ஒரு முறை மட்டுமல்ல இருமுறைகள் மேற்கொண்ட ஜே.வி.பி. அமைப்பின் உயிரிழந்தவர்களுக்கான கொழும்பு ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் நினைவகம் அமைக்கப்பட்டு 1990ஆம் ஆண்டு தொட்டு அஞ்சலிக்கப்பட்டுகிறது. அதை ஆட்சியாளர்களோ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக நிர்வாகமோ தடுக்கவுமில்லை. நினைவிடத்தை தகர்க்கவுமில்லை. இது சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் தமிழருக்கு வேறு ஒரு சட்டமா? என்ற கேள்வியை எழுப்புகின்றது. அப்படியானால் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஆட்சியாளர்களின் கோசத்தின் அர்த்தம்தான் என்ன?

கண்டனத்துக்குரிய இந்த நடவடிக்கை தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேலிடத்தின் உத்தியோகபூர்வமான அறிவுறுத்தலுக்கு அமைவாகவே அதை மேற்கொண்டதாகவும், தான் அதைச் செய்யத் தவறியிருந்தால் வேறு தரப்பினர் அதை மேற்கொண்டிருப்பர் எனவும், பாரதூரமான விளைவுகள் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

கண்ணைக் குத்திய கைகள்

அதாவது இன ஒடுக்குமுறையாளர்கள் எங்கள் கைகளைக் கொண்டே எங்கள் கண்களைக் குத்தியுள்ளனர். அவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் பணியாற்றுபவர் என்ற முறையில் அவர் மேலிடத்தின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. ஆனால், அவர் ஒரு தமிழர் என்ற முறையிலும் போரில் உயிரிழந்தவர்கள் அவரின் உறவுகள் என்ற வகையிலும் இறந்தவர்களை நினைவிடமமைத்து அஞ்சலிப்பதைத் தடை செய்வது மனித நீதியை மறுதலிக்கும் செயல் என்பதாலும் அவர் மேலிடத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாதிருந்திருக்கலாம். அப்படியான நிலையில் அவரின் பதவி கூடப் பறிபோகக் கூடும். மக்களுக்காக இடம்பெற்ற போரில் உயிரிழந்தவர்களுக்காக அவர் தனது பதவியைப் பறி கொடுத்திருந்தால் எமது மக்கள் அவரை உயர்வான இடத்தில் ஏற்றிப் போற்றியிருப்பார்கள்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்த அறிக்கையில் தற்போது யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் எவ்வித பிரச்சினைகளுமின்றி ஒற்றுமையாகக் கல்வி கற்று வருகின்றனர் எனவும், போர்க்காலத்தில் இவர்களுக்குப் 10 அல்லது 11 வயது இருந்திருக்கும் எனவும் இப்படியான நினைவிடயங்களை அமைப்பதால் போர் நினைவூட்டப்பட்டு நல்லிணக்கத்துக்குப் பக்கம் ஏற்பட்டு விடும் என்பதாலே பல்கலைக்கழக நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது எனவும் தெரிவித்திருந்தார்.

முறுகல்

ஒரு பகுதி மாணவர்கள் தங்கள் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்தால் ஏனைய மாணவர்களுடனான நல்லிணக்கம் இல்லாமல் போய் விடும் என்பது துர்நோக்கம் கொண்ட கற்பனையாகும். கடந்த காலங்களில் இப்படியான அஞ்சலிகள் இடம்பெறும் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படவில்லை. மாறாகச் சிங்கள மாணவர்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்கியும் வந்தனர். அதுமட்டுமன்றி அவர் இந்தச் சம்பவம் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது என்ற வகையில் வெளியிட்ட கருத்து நிர்வாகத்துக்கும் மாணவர்களுக்கும் இடையே முறுகலை ஏற்படுத்தும் தீய நோக்கம் கொண்டது என்பதும் அவதானிக்கப்பட வேண்டும்.

இப்படியான நிலையில் மாணவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் பல்கலைக்கழக முன்றலில் கூடி நிர்வாகத்தினருடன் பேச வேண்டும் எனக் கோரினர். பொலிஸார் அனுமதியளிக்க மறுத்த நிலையில் அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

ஆதரவு

தற்சமயம் மாணவர்கள் மீண்டும் நினைவுத்தூபி அமைக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அதேவேளையில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நாளை ஹர்த்தால் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

எனவே, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை முழுத் தமிழ் மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி என்ற வகையில் ஹர்த்தால் நடவடிக்கையில் அனைவரும் இணைந்து தமிழ் மக்கள் என்றுமே ஒடுக்குமுறைகளைத் தலைகுனிந்து ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற செய்தியை ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவோம் – என்றுள்ளது