கடவுள் தான் தமிழ் அரசியல் கைதிகளை காப்பாற்ற வேண்டும்- அரியநேத்திரன்

Untitled 1 3
Untitled 1 3

கடவுள் தான் தமிழ் அரசியல் கைதிகளை காப்பாற்ற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி அம்பாறை மாவட்டம் நாவிதன் வெளி முருகன் ஆலயத்தில் நேற்று(10) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் தெரிவித்ததாவது,

ஈழ விடுதலைப்போராட்டம் அகிம்சை ரீதியாக ஆரம்பித்து அது ஆயுதப்போராட்டமாக உருவெடுத்த காலம் தொட்டு எமது இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்ட வரலாறுகள் உள்ளன .

சிறைகளில் கூட எமது தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட வரலாறுகளும் உள்ளன. தற்போது 147 தமிழ் அரசியல் கைதிகள் இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பெண்களும் அடங்குவர்.

தற்போது நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சிறைகளில் உள்ள பலர் அந்த நோயினால் பாதிப்புறும் நிலை உள்ளது.

சிறைக்கைதிகளின் உறவினர்களும், பெற்றோரும் ஏங்கி தவிக்கின்றனர் இந்த நிலையில்தான் நாம் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை கோரி ஒருவார தொடர் இறைவழிபாட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளோம். நிச்சயமாக அனைவரும் சுகமாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு.

1976 காலப்பகுதியில் தந்தை செல்வா மரணிப்பதற்கு முன்னர் தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அதை நாங்கள் இப்போது கடவுள் தான் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறோம் எனவும் மேலும் கூறினார்.

இந்த இறைவழிபாட்டில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன், காரைதீவு தவிசாளர் ஜெயசிறி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.