கொரோனாக் கட்டுப்பாட்டிலும் தோல்வியடைந்துள்ளது அரசு- திஸ்ஸ அத்தநாயக்க

tissa attanayake
tissa attanayake

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கூடப் பாதுகாக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அரசானது பொருளாதாரம், நிர்வாகம் என்பவற்றில் மாத்திரமின்றி கொரோனாக் கட்டுப்பாட்டிலும் தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகின்றது. என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அரசின் பலவீனத்தையும் ஜனாதிபதியின் குறைபாடுகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இவ்வாறு சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு அந்த குறைபாடுகளை நீக்கிக்கொள்ள வேண்டுமே தவிர கருத்தைத் தெரிவித்தவருக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இவ்வாறான செயற்பாடுகள் சிவில் நிர்வாகத்திலிருந்து விலகி நாடு இராணுவ நிர்வாகத்தை நோக்கிச் செல்கின்றது என்பது தெளிவாகின்றது.  

ஜனாதிபதியின் இந்தக் கருத்தை ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக எதிர்க்கின்றது. நாட்டின் தலைவரொருவர் இவ்வாறு கருத்துக்களைத் தெரிவிப்பது பொறுத்தமற்றது. இவ்வாறான குணாதிசயம் தலைமைத்துவப் பண்புக்கும் பொறுத்தமானதல்ல.

கொரோனாத் தொற்றிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூடப் பாதுகாக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசானது பொருளாதாரம், நிர்வாகம் என்பவற்றில் மாத்திரமின்றி கொரோனாக் கட்டுப்பாட்டிலும் தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகின்றது.

கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படுவது சாதாரண விடயமாகும் என்றும், அதனால் நாடாளுமன்றத்தை முழுமையாக மூட வேண்டிய தேவை கிடையாது என்றும் சபாநாயகர் கூறியிருக்கின்றார்.

நாடாளுமன்றத்தை முழுமையாக மூடாமல் அதன் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடும் கூட. ஆனால், அங்கும் பலருக்குத் தொற்று ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது ? சபாநாயகர் உள்ளிட்ட அதிகாரிகளே அதனைப் பொறுப்பேற்க வேண்டும். முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாடாளுமன்றத்தினுள் பாரதூரமான நிலைமையே ஏற்படும்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமக்கும் உடன்பாடிருக்கின்றது. ஆனால், அதற்கு உகந்த சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

காரணம் தற்போது கொரோனாப் பரவல் சமூகப் பரவலாக மாற்றடைந்து நாடளாவிய ரீதியில் பரவியுள்ளது. அதனால் மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் காணப்படும் அச்சம் நீக்கப்பட வேண்டும். பாடசாலைகளில் சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதற்கும் மேலதிகமாக கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

முழு உலகமும் அவதானம் செலுத்தியுள்ள கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நிதி இல்லை என்று கூற முடியாது. காரணம் கொரோனாத் தொற்றுக்காக பல்வேறு வகையில் நிதி உதவிகள் அரசுக்குக் கிடைத்துள்ளன. இவ்வாறான நிலைமைக்கு மத்தியிலும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் சின்னத்தை மாற்றுவதற்கு பல பில்லியன் ரூபா செலவிடப்பட்டிருக்கின்றது. அது தற்போது அநாவசியமான செலவாகும் – என்றார்.