மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 4639 பேர் பாதிப்பு!

WhatsApp Image 2021 01 12 at 18.47.46 1
WhatsApp Image 2021 01 12 at 18.47.46 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 5 பிரதேச செயலகப்பிரிவுகளில் 1452 குடும்பங்களைச்சேர்ந்த 4639 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 முகாம்களில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

கடந்த 3 தினங்களாக தொடர்ந்து கடும் மழை பெய்துவருகின்றதையடுத்து தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளத்தினால் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 675 குடும்பங்களைச்சேர்ந்த 2027 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் 401 குடும்பங்களைச் சேர்ந்த 1477 பேரும், மண்முணைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 147 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேரும். மண்முணை தெற்கு ,மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேரும் போரதீவு பிரதேச செயலகப்பிரிவில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 482 பேர் உட்பட 4639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெல்லாவெளி பிரதேசத்தில் 3 முகாம்களில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் ஆலயங்களிலும் மற்றும் பாலர் பாடசாலை கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை ஏறாவூர்பற்று, காத்தான்குடி, மண்முணைப்பற்று, மண்முண தெற்கு ,மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் தலா ஒவ்வொரு வீடுகள் உட்பட 4 வீடுகள் சேதமடைந்துள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் குளங்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவுகள் 5 அடி உயரத்துக்கும், நவகிரி குளத்தின் 2 வான்கதவுகள் 5 அடி உயரத்துக்கும், உறுகாமம் குளத்தின் 2 வான்கதவுகள் 8 அடி உயரத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.