புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைத்தல் ; மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்

20210113 104918
20210113 104918

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் இன்றைய சபை அமர்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையின் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்றையதினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இதன்போது கடந்த 8ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.மாநகர சபை மூன்று கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியது.

நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து சபை அமர்பு ஐந்து நிமிடங்கள் ஒத்திவைத்தல், யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவம் மற்றும் காவல்துறையினர், உள்நுழைந்தமை கண்டித்தல் மற்றும் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைத்தல் ஆகிய மூன்று தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முடிவினை முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் ஆரம்பிகப்பட்ட காலத்திலிருந்து உரிமைக்காக போராடிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு.

அந்தவகையில் யாழ் பல்கலைக்களக மாணவன் விஜிதரன் படுகொலை மற்றும் அவருக்கு நீீதி கேட்டு போராடிய விமலேந்திரன் உள்ளிட்ட மாணவர்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் எனவும் தமது கட்சியின் கருத்தினை பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து சபையின் ஏனைய உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவித்ததை அடுத்து முதல்வர் சபை அமர்பை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐந்து நிமிடத்தின் பின்னர் ஏனைய விடையங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சபை அமர்பு ஆரம்பிக்கப்பட்டு தற்போதும் நடைபெற்று வருகின்றது.