கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை யாருக்கும் விற்கவோ குத்தகைக்கு வழங்கவோமாட்டாது கோட்டா அரசு – ஜனாதிபதி திட்டவட்டம்

Kotta
Kotta

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்படவோ, குத்தகைக்கு வழங்கப்படவோ மாட்டாது. இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தெரிவித்தார்.

கொழும்புத் துறைமுகத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

கிழக்கு முனையத்தின் 51 வீதமான பங்குகளை அரசு வைத்துக்கொண்டு, 49 வீதமான பங்குகளையே இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் முதலீடு செய்வதற்காக வழங்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த அரசு கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கிழக்கு முனையத்தை இலங்கைத் துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, முதலீட்டு வாய்ப்புகளே ஏனைய நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.

எனினும், ஜனாதிபதியுடனான சந்திப்பு இணக்கப்பாடின்றியே முடிவடைந்தது எனத் துறைமுகத் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.