இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைத் தேடும் இலங்கை அரசின் முட்டாள்தனமான ‘ரிஸ்க்’ போட்டுத் தாக்கும்- மனோ

Mano Ganesan 850x460 acf cropped
Mano Ganesan 850x460 acf cropped

தூரத்து உறவுக்காரனை நம்பி, பக்கத்து வீட்டு அண்ணனைக் பகைக்கும் மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகளினால் இலங்கை, முட்டாள்தனமான பெரிய ‘ரிஸ்க்’ எடுக்கின்றது. தற்போது இருக்கும் பொருளாதார வருவாயை மறந்து, இல்லாத வருவாயைத் தேடி ஓடுகின்றது. ‘இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதைத் தேடும்’ இந்த ‘ரிஸ்க்’, வெறும் பொருளாதார ‘ரிஸ்க்’ மட்டுமல்ல, அரசியல் ‘ரிஸ்க்’கும்கூட என்பதை உடனடி எதிர்காலம் காட்டலாம். என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது முகநூல் பதிவு வருமாறு:-

“இந்திய நாட்டுக்கும், உலகின் பல நாடுகளுக்கும், இடையில் நடைபெறும் கொள்கலன் மூலமான ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களை ஏற்றி இறக்கும் தொழில் வருமானத்தால்தான், கொழும்புத் துறைமுகம் இலாப வருமானம் பெறுகின்றது.  பல பத்தாண்டுகளாக, பெரிதும் வெளிவராத, உண்மை கதை இதுவாகும். கொழும்புத் துறைமுகத்தில் சுமார் 70 குறையாத கொள்கலன் பரிமாற்றம் இந்திய நாட்டுக்குப் போவதும், வருவதும்தான்.

பெரும் கொள்கலன்களைச் சுமந்து வரும் பெரிய கப்பல்கள் பொதுவாக தமது பயணத்தில் ஒருசில துறைமுகங்களுக்குதான் போகும். எல்லாத் துறைமுகங்களிலும் நின்று போவது, வர்த்தக ரீதியாக பெரிய கப்பல்களுக்குச் சரிபட்டு வராது.

இந்தநிலையில், தென் இந்தியாவில் ஆழமான துறைமுகங்கள் இல்லாததால், இந்தியாவுக்கு வரும் பெருந்தொகைக்  கொள்கலன்களை, கொழும்பில் இறக்கி விட்டு, பெரிய கப்பல்கள் தொடர்ந்து பயணிக்கின்றன. அவற்றைப் பின்னர் சிறிய இந்தியக் கப்பல்கள் வந்து, ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்குச் செல்கின்றன.

இதுதான் பல பத்தாண்டுகளாக நடக்கின்றது. இதனால்தான் கொழும்புத் துறைமுகமே ஓடுகின்றது. கொழும்புத் துறைமுக வருமானத்தால்தான் நாட்டின் ஏனைய துறைமுகங்களும் (காங்கேசன், அம்பாந்தோட்டை, திருகோணமலை) ஓடுகின்றன. பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன.

இந்தநிலையில், இந்தியாவும் தென்னிந்தியாவில் தங்களுக்கு என்று ஓர் ஆழமான பெரிய கப்பல்கள் வந்து போகக்கூடிய துறைமுகங்களை அமைக்காமல் இலங்கைக்கு விட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.

இலங்கை அரசு, எப்போதாவது ஒருநாள் தமக்கு முழுமையான ஆதரவு நாடாக மாறும் என்ற எதிர்பார்பில் உள்ள இந்தியாவின் 50 ஆண்டுக்கால ‘இலவு காத்த கிளி வெளிநாட்டுக் கொள்கை’ இதுவாகும்.

புதிய இலங்கையையே தம் உழைப்பால் உருவாக்கிய மலையகத் தமிழரை, இலங்கையைச் சந்தோஷப்படுத்த, சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் செய்து, நாடு கடத்த இந்தியா இணங்கியது. இதனால், இலங்கையில் தமிழரின், மலையகத் தமிழரின் அரசியல் பலம் குன்றியது. அதைத் தொடர்ந்து, கச்சதீவை, தமிழகத்தின் எதிர்ப்பைக் கவனத்தில் எடுக்காமலேயே இலங்கைக்குக் கொடுத்தது.

விடயம் என்னவென்றால், இவ்வளவு செய்தும், இலங்கை, இந்தியாவுடன் உண்மை நட்பு கொள்ளவில்லை.  இப்போதும், இந்தியாவின் ‘இலங்கை கொள்கை’ காரணமாக, ஒரு பிராந்திய களஞ்சிய துறைமுகமாக, இந்தியப் பொருட்களை ஏற்றி இறக்கியே, கொழும்புத் துறைமுகம், இந்தியத் துறைமுகங்களை விட சிறப்பாகச் செயற்படுகின்றது.

இந்தநிலையில், இப்படி பொருளாதாரத்தில் பல மடங்கு பெரிய நாடான இந்தியாவுடன் சேர்ந்து வளர வேண்டிய வாய்ப்பை இன்னமும் வளர்க்க வழி தேடாமல், மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகள், ‘பிராந்திய களஞ்சிய துறைமுகம்’ என்பதைவிட, கொழும்பை ‘உலக களஞ்சிய துறைமுகமாக’ மாற்றும் யோசனையை சீனாவுடன் சேர்ந்து முன்னெடுக்கத் திட்டம் போடுகின்றார்கள்.

இலங்கையைத் தாண்டி தெற்கு இந்து சமுத்திரத்தில் உலகெங்கும் போகும் வணிகக் கப்பல்களை, “தங்கள் பொருட்களை இங்கே இறக்கி விட்டு போங்கள், நாங்கள் இங்கே இருந்து அவ்வந்த நாடுகளுக்கு அனுப்புகின்றோம்” என்று சொல்லும், கனவு திட்டம் இதுவாகும்.

அதாவது, இன்றுவரை வருமானம் தேடி தரும் இந்தியாவைப் புறக்கணித்து விட்டு, இந்தக் கனவுத் திட்டத்துக்காக சீனா ஆதரவுடன் கொழும்புத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யலாம் என்பது இவர்களின் நோக்கம். இதில் சீனாவின் நோக்கம் என்னவென்பது சீனாவுக்கு மட்டுமே தெரியும்.

இதற்காகத் கொழும்புத் துறைமுகத்தின் இன்றைய மிகபெரிய முனையமான தெற்காசிய நுழைவாயில் முனையம்(South Asian Gateway Termina)l (SAGT) என்பதை முழுமையாக சீனாவுக்குக் கொடுத்து விட்டு, பக்கத்தில் துறைமுக நகரையும் (Port City) சீனாவின் ஆளுமைக்குக் கீழ் கட்டுகின்றார்கள். எதிர்காலத்தில் SAGT முனையத்தில் இருந்து துறைமுக நகருக்குக்  கொள்கலன்களை நேரடியாக இறக்கும் வாய்ப்பு கூட ஏற்படலாம்.

SAGT முனையம் முழுமையாக சீனாவுக்குக் கொடுக்கப்பட்டபோது, அமைதியாக இருந்த அரசு சார்பு அரசியல் தொழிற்சங்கங்கள், இப்போது, இலங்கை அரசுக்கு 51 சதவீதம், ஜப்பான் நிறுவனத்துக்கு 29 சதவீதம், இந்திய நிறுவனத்துக்கு 20 சதவீதம் என்ற ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆகவே, இங்கே அப்பட்டமாக இந்திய எதிர்ப்பு தெரியுது.

இந்நிலையில், இன்று நரேந்திர மோடியின் இந்தியா பொறுமையின் விளிம்பில் இருக்கின்றது. இதனை பத்தாண்டுகளாகக் கொழும்புத் துறைமுகத்துக்கு இலாபம் பெற்றுக்கொடுத்ததையும் மறந்து, சீனாவுடன் இலங்கை உறவாடுவதையும், இந்திய கடல் எல்லைக்கு அண்மையில், கொழும்புத் துறைமுகத்தில் சீனாவுக்கு கேந்திர இடம் கொடுக்கப்படுவதையும் இந்தியாவால் சகிக்க முடியவில்லை.

தமிழகத்தின் தென்கோடியில் கொளச்சல் என்ற இடத்தில் புதுத் துறைமுகம் ஒன்றைக் கட்டும் திட்டத்தில் இந்தியா இன்று இருக்கின்றது. மேலும், கேரளத்திலும், அந்தமானிலும் புதுத் துறைமுகங்கள் கட்டவும் முனைகின்றது.

இவை உருவாகிவிட்டால் இந்திய கொள்கலன்கள் கொழும்பு வரத் தேவையில்லை. இது இலங்கைக்குப் பெரும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தும்.

அதுமட்டுமல்ல, இலங்கை கனவு காணும் இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் ஏனைய பெரிய கப்பல்களையும் இந்த இந்தியத் துறைமுகம் இறக்கி வைத்து, அந்தந்த நாடுகளுக்கு அனுப்பும். குறிப்பாக சீன எதிர்ப்பு நாடுகளான ஜப்பானின், தென் கிழக்கு ஆசிய நாடுகளின், கொரியாவின் பெரிய கப்பல்களும் கொழும்பை விட, தென்னிந்திய துறைமுகத்தையேயே விரும்பும்.

தூரத்து உறவுக்காரனை நம்பி, பக்கத்து வீட்டு அண்ணனைக் பகைக்கும் மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகளினால் இலங்கை, முட்டாள்தனமான பெரிய ‘ரிஸ்க்’ எடுக்கின்றது.

தற்போது இருக்கும் பொருளாதார வருவாயை மறந்து, இல்லாத வருவாயைத் தேடி ஓடுகிறது. ‘இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதைத் தேடும்’ இந்த ‘ரிஸ்க்’, வெறும் பொருளாதார ‘ரிஸ்க்’ மட்டுமல்ல, அரசியல் ‘ரிஸ்க்’கும்கூட என்பதை உடனடி எதிர்காலம் காட்டலாம்” – என்றுள்ளது.