யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47683 பேருக்கு பி சி ஆர் பரிசோதனை!

202011071908391410 November 07 District wise full status of corona damage in SECVPF 2
202011071908391410 November 07 District wise full status of corona damage in SECVPF 2

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சைகளையும் வழங்கி ஏனைய சிகிச்சைகளையும் வழங்கி வருகின்றது. அந்த வகையில் போதனா வைத்தியசாலையில் இதுவரை 41248 பேருக்கும், யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 6435 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இரண்டு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 644 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அபாயம் நிலவிக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் யாழ்.போதனா வைத்தியசாலை ஏனைய சிகிச்சைகளையும் உரிய கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

குறிப்பாக கடந்தகாலப் பகுதிகளில் அதிக குருதி அமுக்கம் மற்றும் இருதய நோயுடைய ஒரு சிலர் உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு வருகை தராமல் உயிரிழப்புகள் பதியப்பட்டு இருக்கின்றது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும் 2020 ஆம் ஆண்டு டெங்கு நோய் தாக்கத்தினால் 866 பேர் சிகிச்சைபெற்று வெளியேறி இருக்கின்றார்கள். இது 2019 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது குறைவாகவே காணப்படுகின்றது. அதாவது 2019 ஆம் ஆண்டு 4415 பேர் டெங்கு நோய் தாக்கத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

எனவே தற்போது மழைகாலம் என்பதால் டெங்கு பரவக்கூடிய அபாயம் காணப்படுவதால் பொதுமக்கள் விழிர்ப்பாக இருப்பது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.