ரஞ்சனுக்காக ஜனநாயக வழியில் போராடத் தயார்- சஜித்

491628a0 7713ca54 sajith 850x460 acf cropped 1
491628a0 7713ca54 sajith 850x460 acf cropped 1

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சபைக்கு அழைக்கவில்லை என்றால் ஜனநாயக வழிகளிலும் போராட நாம் தயாராகவே இருக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்குக் கிடைத்துள்ள சிறைத்தண்டனையை அடுத்து, அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்குத் தற்போது சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை 6 மாதங்களுக்கு இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. நாம் இது தொடர்பாக சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டுள்ளோம்.

அதாவது அரசமைப்பின் 66, 89, 91, 105 ஆவது அரசமைப்புக்கு இணங்க, அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாகாது எனத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால், அதற்கு எதிராக அனைத்து ஜனநாயக வழிகளிலும் போராட நாம் தயாராகவே இருக்கின்றோம் என்பதையும் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்தநிலையில், அவரை ஏன் நாடாளுமன்றுக்கு இன்று அழைக்கவில்லை எனச் சபாநாயகரிடம் நான் கேட்க விரும்புகின்றேன். அவர் சிறந்த ஓர் அரசியல்வாதி. பொய், ஊழல், இனவாதம் அற்ற ஓர் அரசியல்வாதி. அவர் மக்களின் மனங்களை வென்றவர்.

இப்படியான ஒருவரை ஏன் இன்று நாடாளுமன்றுக்கு அழைக்கவில்லை என்பதற்குப் பதில் கோருகின்றேன் என தெரிவித்துள்ளார்.