பிரித்தானியா பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பு பகிரங்க மடல்

image 6483441 1
image 6483441 1

பிரித்தானியா பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பு பகிரங்க மடல்

இலங்கை அரசால் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, யுத்தக்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கையை முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு பிரித்தானியா பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பரிந்துரைக்க வேண்டுமென கோரி கடந்த 12-01-2021 அன்று கடிதம் அனுப்பி வைத்ததாக வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்

அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் தமிழ் பிரதியினை இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தார் அந்த கடிதத்தின் முழு விபரங்கள் பின்வருமாறு

மாண்புமிகு கொளரவ பொறிஸ் ஜோன்சன்
பிரதமர் 10 டவுனிங் ஸ்ட்ரீட்
லண்டன்

உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த பிரேரணைக்கு இலங்கையின் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாகிய நாம் இக்கடிதத்தினை எழுதுகின்றோம்.

2009 இல் சிறீலங்கா அரசு இனவழிப்பு ஒன்றின் மூலம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் ஐ.நா செயலாளர் நாயகம் பாங்கி மூன் அவர்கள் மூவர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை நியமித்தார்.

போரின் போது கடைப்பிடிக்க வேண்டிய சர்வதேச சட்டத்தின் அனைத்து பரிமாணங்களையும், இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தில் மீறியுள்ளதாக அந் நிபுணர்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

அதனைத் தொடர்ந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியது. குறிப்பாக இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் ஊக்குவிக்க 19/02,தீர்மானத்தையும் மற்றும் மார்ச் 2013 ,மார்ச் 2014 தீர்மானங்கள் நிறைவேற்றியது. மேலும் தீர்மானங்கள் 30/01 ஒக்டோபர் 2015, 34/01 மார்ச் 2017 மற்றும் 40/01 மார்ச் 2019 ஆகியவற்றிற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் ,கால அவகாசங்கள் வழங்கப்பட்டும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக நீதிக்கான செயன்முறைகளில் எந்தவித முன்னேற்றம் இல்லாது தொடர்ந்தும் தமிழ் மக்களின் கலாச்சார,பண்பாட்டு அடையாளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றது.

ஆகவே கடந்தகால சம்பவங்களையும் ,நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலைமைகளையும் ஆராய்ந்தால் ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கையில் பொறுப்புணர்வை உண்மையாக கையாள எந்த வித வாய்ப்பும் இல்லை என்பதை திட்டவட்டமாக தாங்கள் உறுப்பு நாடுகளுக்கு தெரிவிக்க வேண்டுமெனவும்,

இலங்கை அரசால் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, யுத்தக்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கையை முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு தாங்கள் பரிந்துரைக்க வேண்டுமெனவும்

கடந்த 16.12.2019 அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும் என்றும், அவர்களை திருப்பி கொண்டுவர முடியாது என்றும் கூறியுள்ளார்,

இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து இயங்கிய துணை இராணுவ குழுவினராலும் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்தத்தின் இறுதியில் உறவினர்களால் கையளிக்கப்பட்டும், உறவினர்கள் முன்னிலையில் சரணடைந்தவர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லையென்றால் இராணுவமும் அரசும் பொறுப்பு கூற வேண்டும். குறிப்பாக இறுதி யுத்த காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்தவர் என்ற அடிப்படையில் தற்போதய ஜனாதிபதியும் பொறுப்பு கூறவேண்டியவரே. ஆகவே பொறுப்புக்கூறல் சம்பந்தமாக பலமான நடவடிக்கை எடுப்பதற்காக உயரிய தளங்களுக்கு இவ்விடயம் கொண்டு செல்ல தாங்கள் ஆவண செய்ய வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பாகிய நாங்கள் தங்களிடம் வேண்டி நிக்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது