சுயநிர்ணய உரிமையுடன் தமிழர்கள் வாழ வேண்டும் :அரசமைப்பு உருவாக்க நிபுணர் குழுவினரிடம் எடுத்துரைத்தது கூட்டமைப்பு!

e0cb490243f1b233690f6a706700ffe6 1
e0cb490243f1b233690f6a706700ffe6 1

இலங்கையில் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன், நிரந்தரமான பாதுகாப்புடன் தமிழர்கள் வாழ வேண்டும். அதற்கேற்ற மாதிரி புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். இல்லையேல் வெளியக சுய நிர்ணய உரிமையை சர்வதேசத்திடம் தமிழர்கள் கோருவார்கள்.என்று புதிய அரசமைப்பு உருவாக்க நிபுணர் குழுவினரிடம் நேரில் எடுத்துரைத்தது இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

புதிய அரசமைப்பு உருவாக்கல் பணிகளுக்ககா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., பங்களாளிக் கட்சித் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), த.சித்தார்த்தன் எம்.பி. (புளொட்) ஆகியோர் பங்குபற்றினர். ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை.

இதன்போது, புதிய அரசமைப்பு உருவாக்கலுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இலங்கையில் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன், நிரந்தரமான பாதுகாப்புடன் தமிழர்கள் வாழ வேண்டும். அதற்கேற்ற மாதிரி புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். இல்லையேல் வெளியக சுய நிர்ணய உரிமையை சர்வதேசத்திடம் தமிழர்கள் கோருவார்கள்.

உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோரும் உரித்து ஒரு சமூகத்துக்கு உள்ளது.

1986ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரையில் எமக்கு சமஷ்டி முறையிலான உள்ளக சுய உரிமையின் அடிப்படையிலும் இறையாண்மையின் அடிப்படையிலும் அதியுச்ச அதிகாரப் பகிர்வை நாம் கேட்கின்றோம். அதனை நாங்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்களுக்கிடையில் எங்களுக்குத் தேவையென்றே கேட்கின்றோம். ஆனால், அது இன்றுவரை கிடைக்கப்பெறவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் பிரகடனத்தின் அடிப்படையில் எம்மை ஆட்சி புரிவதற்கு ஓர் அரசுக்கு எமது சம்மதம் இருக்க வேண்டும்.

குறித்த சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாங்கள் உள்ளக சுய உரிமையைப் பெறுவதற்கு உரித்து உண்டு.

ஆனால், அவ்வாறு சுயநிர்ணய உரிமை வழங்கப்படாவிட்டால் வெளியக சுய உரிமையைக் கோரும் உரித்து உள்ளது என்று புதிய அரசமைப்பு உருவாக்க நிபுணர் குழுவிடம் நாம் எடுத்துரைத்தோம்” – என்றார்.

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்றை புதிய அரசு நியமித்திருப்பது தெரிந்ததே.

ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பேராசிரியர் நஸீமா கமர்டீன், சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.சர்வேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி சமன் ரத்வத்த, ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்த்தனா, பேராசிரியர் வசந்த ஜெனிவிரத்தை ஏனைய எண்மருமாவார்.

இந்தக் குழுவுக்கு தமிழ்க் கூட்டமைப்பும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான யோசனைத் திட்டத்தைச் சமர்ப்பித்திருந்தது. இந்தக் குழுவையே கூட்டமைப்புத் தலைவர்கள் நேற்று சந்தித்து தமது கருத்து நிலைப்பாட்டைத் தெரிவிதத்தனர்.

இந்த நிபுணர் குழு புதிய அரசமைப்புக்கான தனது நகல் வரைவை இந்த ஆண்டு இறுதிக்கு முன் சமர்ப்பிக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.