யாழ் மாவட்டத்தில் 14565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றது- யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்!

IMG 6861
IMG 6861

“யாழ்ப்பாண மாவட்டத்தில் 14565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றது” என யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற மூன்றாம்நிலை, தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறையினை அபிவிருத்தி செய்வதற்கான மாவட்ட செயலக கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (25) காலை பத்துமணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் உதவிப் பணிப்பாளர் (TVEC) , உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட செயலக திட்டமில் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட தொழில் கல்வி நிலையங்களின் பிரதிநிதிகள், உதவிக்கல்விப் பணிப்பாளர் மற்றும் தொழிற்கல்வி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் தேசியரீதியாக செயற்படுத்தப்படுகின்ற மூன்றாம் நிலை, தொழில்நுட்பக்கல்வி மற்றும் தொழில்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அங்குரார்ப்பண கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையற்றோர் வீதத்தினை குறைப்பதனை நோக்கமாகக் கொண்டு இச் செயற்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அத்தோடு தற்போது கொரோனா தொற்று வைரஸ் நிலமை காரணமாக வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கின்றபோது எமது இளைஞர்களின் வாழ்க்கைத்திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறுபட்ட செயற்திட்டங்களை பிரதேச செயலகங்கள் , வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபை, மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு, தேசிய தொழில் பயிலுநர் மற்றும் தொழில் பயிற்சி அதிகாரசபை ஆகியன தங்களுடைய பணிகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுத்து வருவதோடு தொழில் நுட்பம் சார்ந்த பலதரப்பட்ட விடயங்களை தொழில்நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மற்றும் துறைசார் நிறுவனங்கள் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 14565 பேர் தொழில் வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன எனினும் இவ் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படலாம். இவ் வேலை தேடுவோர் க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த. சாதாரண தரதிற்கும் குறைந்த என்னும் பெறுபேறுகளின் அடிப்படையில் காணப்படுகின்றார்கள்.

மேலும் மூன்றாம் நிலை கல்வி தொடர்பான பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் தற்போது நடைபெற்றுவருகின்றன. அனைத்து பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் செயற்படுகின்ற துறைசார் உத்தியோகத்தர்களை ஒருமுகப்படுத்தி இளைய சமூகத்தை சரியான பாதையில் வழிப்படுத்த இச் செயற்குழுக்கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் இக் கூட்டத்தில் மாவட்ட மட்டத்திற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு ஏழு உப குழுக்களும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது ஆகும்.