இந்தியாவுக்குப் பயந்தா இம்ரானுக்கு விருந்து வழங்கவில்லை? – கோட்டாவிடம் ரணில் அணி கேள்வி

h 34
h 34

இந்தியாவின் அழுத்தத்தாலோ அல்லது அந்த நாட்டுக்குப் பயந்தா? பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விருந்துபசாரம் வழங்கவில்லை?”என்வாறு கேள்வி எழுப்பியுள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.

பாகிஸ்தான் பிரதமர், இலங்கை நாடாளுமன்ற உரையை இரத்துச் செய்தமை குறித்தும் சந்தேகம் உள்ளது எனது அக்கட்சி குறிப்பிட்டுள்ளது .

இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறுகையில்,

“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விருந்துபசாரம் வழங்காமைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதற்கு முன்னர் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இலங்கை வந்தபோது, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தனித்தனியாக விருந்துபசாரங்களை வழங்கியிருந்தனர்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில், அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான பர்வேஸ் முஷாரப் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது ஜனாதிபதி சந்திரிகா மற்றும் அப்போதைய பிரதமராகச் செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும் தனித்தனியாக விருந்துபசாரம் வழங்கினர்.

இவ்வாறு இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு உபசரிப்புகளைச் செய்வதானது காலகாலமாக பின்பற்றப்பட்டு வரும் செயற்பாடாகும்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மாத்திரமே விருந்துபசாரம் அளித்திருந்தார். இந்த விருந்துபசாரத்தில் 150 பேர் வரையில் கலந்துகொண்டிருந்தனர். அதற்கமைய 200 பேர் உள்ள நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமரின் உரையை நடத்த அனுமதிக்காமையும், ஜனாதிபதி விருந்துபச்சாரத்தை வழங்காமையும் பெரும் சந்தேகத்தையே தோற்றுவிக்கின்றது” – என்றார்.