வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் விதை நெல் சுத்திகரிக்க முடியாத நிலையில் விவசாயிகள்!

201911121509360524 Contamination of seed paddy provided by the Ministry of SECVPF
201911121509360524 Contamination of seed paddy provided by the Ministry of SECVPF

வவுனியாவில் அமைந்துள்ள அரச விதை உற்பத்தி பண்ணையில் விதை தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன் விதை தானியங்கள் சுத்திகரிக்கப்பட்டும் வழங்கப்படுவது வழக்கம்.

தற்போது சிறுபோக செய்கையை ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களிடமுள்ள விதை நெல்லை சுத்திகரிப்பு செய்ய பண்ணைக்கு சென்றால் அங்கு பணிபுரிபவர்கள் பொறுப்பற்ற பதிலை சொல்லி திருப்பி அனுப்புகின்றனர்.

ஒரே இன நெல்லையே தம்மால் தொடர்சியாக சுத்திகரிப்பு செய்ய முடியும். வெவ்வேறு இனங்கள் ஆயின் அந்தந்த இனங்கள் பல ஆயிரம் கிலோ வரை சேர்ந்தால் மட்டுமே சுத்திகரிப்பு செய்ய முடியும். அதுவரை நீங்கள் காத்திருக்க வேண்டும் என விவசாயிகள் திருப்பி அனுப்ப படுகின்றனர்.

வவுனியாவில் உளுந்து செய்கையாளர் ஒருவர் இந்த பிரச்சனை குறித்து தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்தார்.

நான் பல வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றேன். இம்முறை உளுந்து பயிரிட்டேன். மழை காரணமாக அவை சரியான விளைச்சலை தரவில்லை. 150 கிலோ வரை அறுவடை செய்ய முடிந்தது. அதுவும் தரமான உளுந்தாக வரவில்லை. அந்த உழுந்தை சுத்தம் செய்தால் மட்டுமே விற்பனை செய்ய முடியும். இப்படி பல தடவைகள் பண்ணையில் சுத்தம் செய்து விற்பனை செய்திருக்கிறேன். இம்முறை உழுந்தை சுத்திகரிப்பு செய்ய கொண்டு சென்றபோது வாயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்னை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

முகாமையாளரிடம் அனுமதி பெற்று அவரால் குறிப்பிடப்படும் தினத்தில் கொண்டு வந்துதான் சுத்தம் செய்யலாம் என்றனர்.

உழுந்தை உள்ளே கொண்டு செல்ல அவர் அனுமதிக்கவில்லை. குறித்த உழுந்தை வாடகை வாகனத்தில் ஏற்றிவந்து மீள வீட்டுக்கு கொண்டு செல்ல 3000 ரூபா செலவானது. என்றார்

விதை நெல் சுத்திகரிப்பு செய்ய கொண்டு சென்ற பலரும் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

தம்மிடம் பல ஆயிரம் கிலோ தானியங்கள் இல்லை. விதை தேவைக்காக சுத்திகரிப்பு செய்ய கொண்டு சென்றால் பல ஆயிரம் கிலோ சேர்ந்தால் தான் சுத்தம் செய்ய முடியும் என்றால் சிறுபோக விதைப்பை பெரும்போகத்தில்தான் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்