ஸ்தாபிக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் விசேட செயலணி!

158713327 4025101730841506 1846953104214972261 o
158713327 4025101730841506 1846953104214972261 o

தற்போது எமது நாட்டுக்கான புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான பரிந்துரைகள் எமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரப்பட்டு புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் விசேட செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இச் செயலனியானது பல சட்டவல்லுனர்களையும் அதே போன்று அரச ஜனாதிபதி சட்டத்தரணி குளாமினையும் மேலும் பல புத்திஜீவிகளையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் சுமார் நாலு வருடங்கள் முதலமைச்சராக இருந்தவன் என்ற அடிப்படையிலும் மாகாணசபை முறைமையினை நன்கு அறிந்தவன் என்ற வகையிலும் மேலும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கிழக்கு மாகாணத்தினுடைய பிரதான கட்சியின் தலைவன் என்ற அடிப்படையிலும் நானும் என்னுடன் இணைந்து அரசியல் அமைப்பு சீர்திருத்த முன்மொழிவுகளை தயார் செய்த எமது குளாமினரும் இன்று அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான செயலணியினை பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் சந்தித்து அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை முன் வைத்திருந்தோம்.

இதில் குறிப்பாக நடைபெறாது இருக்கும் மாகாணசபை முறைமையினை அதாவது தமிழர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள கூடிய அதிகூடிய அதிகார பரவலாக்க மாகண சபை முறைமையினை தடையின்றி தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதனையும் குறிப்பாக 13 ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறை படுத்துவதுடன் அதனையும் தாண்டி 13 பிளஸ் என்று சொல்லப்படுகின்ற சட்டத்தினை பற்றியும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய முன்மொழிவுகளையும், மேலும் பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டு அதற்கான சட்ட விதிமுறைகள் ஆராயப்பட வேண்டும் என்கின்ற விடயங்களும் எம்மால் முன்மொழியப்பட்டது.

அதேபோன்று பிரதானமாக வாக்களிப்பு மற்றும் வேட்பாளர் தெரிவு முறைமை பற்றிய முன்மொழிவுகள், அதாவது பெண்களுக்கான வேட்பாளர் உரிமை முன்னிலை படுத்தப்படவேண்டும் ஒவ்வொரு தேர்தலிலும் அது நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி மாகாணசபை தேர்தலாக இருந்தாலும் சரி உள்ளுராட்சி மன்ற தேர்தலாக இருந்தாலும் சரி 33% பெண் வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்கின்ற விடயமும் அதேபோன்று குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் சிறைச்சாலையில் இருப்பவர்கள் மற்றும் நாட்டின் அந்நிய செலாவணி நிதியினை வெளிநாட்டில் இருந்து உழைப்பவர்களும் வாக்களிக்கக் கூடிய புதிய முறைமையினை இனி வரும் காலங்களில் உருவாக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் மேலும் பல முக்கிய முன்மொழிவுகளும் அங்கு எம்மால் முன்மொழியப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.