ஐ.நா பிரேரணைக்கு ஆதரவளித்த நாடுகளின் தீர்மானத்தில் நடுநிலை வகித்த நாடுகளின் பங்களிப்பு மிக முக்கியமானது-நா.உ மாவை!

IMG 20210329 171252
IMG 20210329 171252

நாங்கள் முழுமையாக எதிர்பார்த்த அவ்வளவும் ஒரு பிரேரணையாக வரவில்லையே தவிர அதை நோக்கிச் செல்வதற்கான நகர்வுகள் பல அத்தீர்மானத்தில் இருக்கின்றன. தினேஸ் குணவர்த்தன சொல்வது போன்று நடுநிலைமை வகித்தவர்கள் எல்லோரும் இலங்கைக்கு ஆதரவானவர்கள் அல்ல. பிரேரணைக்கு ஆதரவளித்த இருபத்திரெண்டு நாடுகள் எடுத்த தீர்மானத்தில் நடுநிலை வகித்த நாடுகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

கட்சி செயற்பாடுகள் குறித்து இன்றைய தினம் திருக்கோவிலில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் மிகத் தெட்டத் தெளிவாக யாரை முன்னிறுத்தி எமது பிரதேசங்களை தேர்தல் ரீதியாகவும், ஜனநாயக ரீதயாகவும் கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்கின்றது. தற்போது ஜனாதிபதியாக வந்திருப்பவரின் நிருவாக அலகுகளிலே இராணுவத்தில் இருந்தவர்கள், சர்வதேச ரீதியில் போர்க்குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நாடு முழுவதும் தலைமைப் பொறுப்புகளிலே அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். அதே போலவே போர்க்குற்றம் சுமத்தப்பட்ட ஜனாதிபதியும் ஜனநாயக ரிதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

தற்போது மியன்மாரில் நடக்கின்ற சம்பவங்களைப் பார்த்தால் எதிர்காலத்தில் எமது நாட்டிலும் என்ன நடக்கப் போகின்றது என்பதையும் மிகவும் அச்சத்தோடு எதிர்நோக்குகின்ற காலம் இது. எனவே நாங்கள் மிகக் கவனமாக, அவதானமாக எமது இளம் சமுதாயத்தை அணி திரட்ட வேண்டியதும், கட்சிகளை அதற்கு ஆயுத்தம் செய்ய வேண்டியதும், தேர்தலை மாத்திரம் மையப்படுத்தாமல் செயற்பட வேண்டியதுமான பொறுப்புகளைக் கொண்டிருக்கின்றோம்.

இன்று எமது பிரச்சனை ஐ.நா வரை கொண்டு செல்லப்பட்டு தற்போது ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பயம்தான் இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட முடியாதபடி சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற பேச்சுகள் இடம்பெறுகின்றன. பொறுப்புக்கூறல் என்பது மிகவும் முக்கியமானது. குற்றமிளைத்ததைப் பொறுப்புகூறும் கடமை அரசாங்கத்திற்கும், இராணவத்திற்கும் இருக்கின்றது. அவை இந்தப் பிரேரணையில் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

நாங்கள் முழுமையாக எதிர்பார்த்த அவ்வளவும் ஒரு பிரேரணையாக வரவில்லையே தவிர அதை நோக்கிச் செல்வதற்கான நகர்வுகள் பல அத்தீர்மானத்தில் இருக்கின்றன. இந்தியாவின் செல்வாக்கும் அந்தப் பிரேரணையில் இருக்கின்றது. அவர்கள் மிக நுட்பமாக சீனாவின் கைபிடிக்குள் இந்த அரசாங்கம் முழுமையாகச் சென்றுவிடாமல் இந்து சமுத்திரத்தினுள்ளே இந்தியாவின் வல்லான்மைத்துவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், இலங்கையைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவும் மிகக் கவனமாக தமிழர்களுடைய இனப்பிரச்சினை உட்பட சொல்ல வேண்டிய கருத்துக்களை அந்தச் சபையிலே சரியாகப் பேசி நடுநிலைமை வகித்திருக்கின்றார்கன். அது மிகத் தந்திரோபாயமானது. இதனை நாங்கள் நினைத்தவாறு திட்டித்தீர்ப்பதால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

எனவே இந்தப் பிரேரணையினால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் என்ன நலன்கள் ஏற்பட இருக்கின்றன என்பதைப் பொறுமையுடன் எதிர்பார்த்திருக்க வேண்டும். குற்றமிளைத்தவர்களுக்குத் தண்டனை என்பது ஒன்றாக இருந்தாலும் மறுபுறம் எமது இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டியதற்கான திறவுகோள்கள், சர்வசேத்தின் சந்தர்ப்பம் என்பனவும் முக்கியம். இந்தியாவை நாங்கள் முழுமையாக ஏற்க வேண்டும். இந்தப் பிராந்தியத்திலே அவர்களது செல்வாக்கும், பலமும் எமக்கு அவசியம். சில வேளைகளிலே அடுத்த தடவைகளில் இந்தியா ஐ.நா பாதுகாப்புச் சபைக்குத் தெரிவு செய்யப்படக் கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. பாதுகாப்புச் சபையில் இருந்து விலகிய அமெரிக்காவும் அடுத்த தடவைகளில் திரும்பி வரவும் முடியும்.

எனவே இருக்கின்ற நாடுகள் இந்தச் சபையிலே கொண்டு வரப்பட்ட பிரேரணைகள் தோற்றுவிடக் கூடாது என்பதில் தான் மிகவும் அக்கறை கொண்டிருந்தார்கள். தினேஸ் குணவர்த்தன சொல்வது போன்று நடுநிலைமை வகித்தவர்கள் எல்லோரும் இலங்கைக்கு ஆதரவானவர்கள் அல்ல. பிரேரணைக்கு ஆதரவளித்த இருபத்திரெண்டு நாடுகள் எடுத்த தீர்மானத்தில் நடுநிலை வகித்த நாடுகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கின்றது.