நாடாளுமன்ற உறுப்பினர்களையே அச்சுறத்தும் அளவிற்கு இந்த மண் மாபியாக்கள் செயற்படுகின்றன-நா.உ கோவிந்தன் கருணாகரம்!

vlcsnap 2021 03 30 21h33m24s632
vlcsnap 2021 03 30 21h33m24s632

சட்டவிரோத மண் அகழ்வு செயற்பாடுகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து நடக்குமாக இருந்தால் எமது மாவட்டம் நிர்க்கதியான நிலைக்குள் தள்ளப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்களையே அச்சுறத்தும் முகமாக மீண்டும் மீண்டும் இந்த மண் மாபியாக்கள் நடந்து கொள்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் இன்றைய தினம் வேப்பவெட்டுவான் பிரதேசத்திற்கு மேற்கொண்ட களவிஜயத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் வேப்பவெட்டுவான் பிரதேசத்தில் மீண்டும் இராஜாங்க அமைச்சருடன் களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தோம். அன்று குளம் போல் காட்சியளித்த பகுதி இன்று நிரப்பப்பட்டிருக்கின்றது. அதற்கு மண் எங்கிருந்து வந்ததென்றால் அதனைச் சொல்ல முடியாமல் இருக்கின்றார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களையே அச்சுறத்தும் முகமாக மீண்டும் மீண்டும் இந்த மண் மாபியாக்கள் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

மேற்படி பிரதேசங்களில் தான் கொடுத்த அனுமதியை மீறி மண் அகழ்வு சட்டத்திற்கு விரோதமாக இடம்பெற்றிருப்பதாக புவிச்சரிதவியல் திணக்கள அதிகாரி கூடச் சொல்லுகிறார். இங்கு களவிஜயம் மேற்கொண்ட எந்த அதிகாரியும் விரும்பத்தக்கதான செயலாக இச்செயல் பார்க்கப்படவில்லை.

அதுமாத்திரமல்லாமல் இந்தப் பிரதேசத்து விவசாயிகள் கூட மிகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு இராஜாங்க அமைச்சரின் தலைமையிலே எடுக்கப்படும் என்று நான் நினைக்கின்றேன்.

அத்துடன் மட்டக்களப்பிற்கு சில அமைச்சர்கள் வருகை தந்து கூட்டம் நடாத்த இருக்கின்றார்கள். அதிலும்கூட நாங்கள் இந்த விடயங்கள் தொடர்பில் பேச இருக்கின்றோம். எதிர்காலத்திலே இவ்வாறான வேலைகள் தொடர்ந்து நடக்குமாக இருந்தால் எமது மாவட்டம் நிர்க்கதியான நிலைக்குள் தள்ளப்படும் என்பதே உண்மை. எனவே இதனை அனைவரும் இணைந்து இதற்கான நிரந்தர முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.