மாகாண சபைத் தேர்தல் நடத்துவது மக்கள் ஆணைக்கு விரோதமானது – ஜனாதிபதிக்கு 14 பௌத்த அமைப்புகள் கடிதம்

Kotta
Kotta

மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்துவது மக்கள் ஆணைக்கு விரோதமான நடவடிக்கையாகும் என்று பௌத்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

14 பௌத்த அமைப்புகளின் தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு நேற்றுப் புதன்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அரசின் தீர்மானம் வாக்களித்த மக்களின் ஆணைக்கு விரோதமானது என்றும் பௌத்த அமைப்புகள் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்பு வரைவுக் குழு, அதன் பரிந்துரைகளை முன்வைக்க முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது, அமைச்சரவையின் தூரநோக்கற்ற செயற்பாடாகும் என்றும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்தி, மாகாண சபைகள் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டால், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஏற்ப அரசு செயற்பட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பௌத்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.

வாக்களித்த மக்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்பை அரசு குறுகிய காலத்தில் மறந்தமை கவலையளிக்கின்றது எனவும் பௌத்த அமைப்புகள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளன.