ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மௌலவி கிடையாது! – ஹக்கீம்

Rauff Hakeem Condemned of Cremation of COVID19 Muslim Janaza 1
Rauff Hakeem Condemned of Cremation of COVID19 Muslim Janaza 1

உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியாக இருக்க வாய்ப்பில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார். அவர் இவ்வாறான கருத்துக்களைக் கூறி பின்னர் அவற்றை வாபஸ் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள் உண்டு.

இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்.

நௌபர் மௌலவியை விடவும் பிரதான சூத்திரதாரிகள் உள்ளனர் என்பதை ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும்.

ஈஸ்டர் தாக்குதல் என்ற திரைப்படத்தின் திரைக்கதை வசனம் வேண்டுமானால் இந்த நௌபர் மௌலவியினதாக இருக்கலாம். பிரதான நடிகர் சஹ்ரானாக இருக்கலாம். சில துணைநடிகர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். பெண் நடிகையான சாரா என்ற நடிகையைக் காணவில்லை. எனினும், இந்தத் திரைப்படத்தைத் தயாரித்தது யார்? இதனை இயக்கியது யார்? என்ற கேள்விக்கே விடை தேட வேண்டும்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலிய உளவுப் பிரிவினர் இருந்தார்களா என்ற சந்தேகம் காணப்படுகின்றது.

இந்தத் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் முழு அளவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்