அரசியல் களத்தில் மீண்டும் அதிரடி காட்டுவாரா மங்கள?

mankala
mankala

அரசியல் களத்தில் மீண்டும் அதிரடி காட்டுவாரா மங்கள?’ என்ற தலைப்புடன் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக இன்றளவிலும் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஜெனிவாவில் 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியமை பாரிய காட்டிக்கொடுப்பாகும் எனத் தற்போதைய அரசும், தேசிய வாத அமைப்புகளும் குற்றஞ்சாட்டுவதுடன், அப்போது வெளிவிவகார அமைச்சராகச் செயற்பட்ட மங்கள சமரவீர மீதும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இவற்றுக்குப் பதிலடி கொடுப்பதற்கும், உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை விபரிக்கவும் மங்கள சமரவீர கடந்த வாரம் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினார்.

இணை அனுசரணை வழங்கியதாலேயே இலங்கைமீதான சர்வதேச விசாரணை தடுக்கப்பட்டது எனவும், குறித்த பிரேரணையில் இருந்த உள்ளடக்கங்களை மைத்திரிபால சிறிசேன அறிந்தே வைத்திருந்தார் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார். அத்துடன், ஜெனிவாவில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் அரசுக்கு பல வழிகளிலும் நெருக்கடியாகவே அமையும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்.

ஆனால், மங்கள சமரவீரவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவென்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நேரடியாக உரிய பதிலை மங்கள வழங்கவில்லை. ஆனாலும், சந்திரிகா அம்மையாருடன் இணைந்து பாரியதொரு அரசியல் வேலைத்திட்டத்தை மங்கள சமரவீர முன்னெடுப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு அரசியலில் திடீர் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஒருகாலகட்டத்தில் பேர்போன – புகழ்பெற்ற மங்கள சமரவீர, சந்திரிகா அம்மையாருடன் இணைந்து முன்னெடுக்கவுள்ள புதிய பயணம் சிலரை கிளிகொல்ல வைத்துள்ளது எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது – என்றுள்ளது.